யாழ்.ஊர்காவற்றுறை - காரைநகர் பாதைச் சேவை தொடர்பில் பெதுமக்கள், அரச ஊழியர்கள் ஆளுநரிடம் முன்வைத்துள்ள கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.ஊர்காவற்றுறை - காரைநகர் பாதைச் சேவை தொடர்பில் பெதுமக்கள், அரச ஊழியர்கள் ஆளுநரிடம் முன்வைத்துள்ள கோரிக்கை..

யாழ்.ஊர்காவற்றுறை - காரைநகர் இடையில் சேவையில் ஈடுபடும் பாதைச் சேவையை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு  பிரதேசத்திலுள்ள அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இப்பாதைச் சேவை இடம்பெறாமையால் தாங்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ள இவர்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபை இவ்விடயத்தில் அசமந்தப் போக்கை கடைப்பிடிக்கின்றது எனவும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கடந்த வியாழக்கிழமை வடக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

காரைநகர் மற்றும் வலிகாமம் மேற்கு, வலிகாமம் தென் மேற்கு உள்ளிட்ட பல இடங்களில் இருந்து ஊர்காவற்றுறை, வேலணை மற்றும் தீவுப் பிரதேசத்தில் உள்ள அரச அலுவலகங்களில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களும், இதேபோன்று மேற்படி தீவகத்தில் இருந்து காரைநகர் 

மற்றும் இதர பிரதேசங்களில் உள்ள அலுவலகங்களுக்கு செல்லும் அரச உத்தியோகத்தர்களும் மற்றும் பொதுமக்களும் என ஆயிரக்கணக்கானோர் தினமும் இப்பாதை ஊடாகவே பயணத்தை மேற்கொள்கின்றோம்.

எரிபொருள் இன்மையைக் காரணம் காட்டி கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பாதைச் சேவை இடம்பெறவில்லை. இக்காலத்தில் தனியார் படகுச் சேவை இடம்பெற்று வருகின்றது. 

இப்படகு மூலமான பயணம் ஆபத்துக்கள் நிறைந்தது என்பதுடன் எமது மோட்டார் சைக்கிள்களின் மக்காட், கண்ணாடி, சிக்னல் போன்றன அடிக்கடி உடைந்து சேதமடைகின்றன. 

மேலும் வாகன அடிச்சட்டமும் பாதிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிள்களை ஏற்றி இறக்கும்போது கீழே வீழ்ந்து உதிரிப்பாகங்கள் சேதமடைகின்ற சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்கின்றன. 

அத்துடன் இருவழிக் கட்டணமாக தினமும் 200 ரூபா பணம் செலுத்தவேண்டி உள்ளது.தற்போதைய பொருளாதார நெருக்கடியான காலகட்டத்தில் எமது வாகனங்களின் உதிரிப்பாகங்களை அடிக்கடி மாற்றுவது என்பதும், 

தினமும் 200 ரூபா பணம் செலுத்துவது என்பதும் எங்களை கடுமையாக பாதித்துள்ளது. இச்சுமையை எங்களால் சுமக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இப்பாதை விடயத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபை தொடர்ந்தும் அசமந்தப் போக்கை கடைப்பிடிக்கின்றது. 

என நாம் உணர்கின்றோம். பயணிகள் சேவையில் ஈடுபடும் இ.போ.ச மற்றும் தனியார் பேருந்துகளுக்கு விசேட அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படுவது போன்று பாதைக்கும் எரிபொருள் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். 

அத்தியாவசிய சேவையான பாதை ஒன்று இருக்கின்ற நிலையில் நாம் இவ்வாறு வீணான சிரமங்களை எதிர்நோக்குவது வேதனையானது. மண்ணெண்ணெயில் இயங்கக்கூடிய இயந்திரமே தங்களிடம் இருப்பதால் மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ள முடியாத காலங்களில் சேவையை மேற்கொள்ள முடியாமல் உள்ளது. 

என வீதி அபிவிருத்தி அதிகார சபை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், பெற்றோலில் இயங்கக்கூடிய இயந்திரம் ஒன்றையும் வைத்திருப்பதன் மூலம் மண்ணெண்ணெய் இல்லாத நேரங்களில் பெற்றோலில் இயக்கி சேவையை மேற்கொள்ள முடியும் என நம்புகின்றோம்.

எனவே, இவ்விடயத்தில் தாங்கள் அதிகூடிய கரிசனை எடுத்து பாதைச் சேவை தடையின்றி சீராக நடைபெற ஏற்பாடு செய்வதன் மூலம் அரச உத்தியோகத்தர்களினதும் பொதுமக்களினதும் வீண் சிரமங்களுக்கும் பொருளாதார இழப்புக்களுக்கும் தீர்வு பெற்றுத்தருமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரதிகள் யாழ்.அரச அதிபர், ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு