வெற்றிவாகை சூடியது கொழும்பு வடக்கு இளையோர் கிரிக்கெட் அணி!!
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட 17 வயதுக்குட்பட்ட இளையோர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டியில் கண்டி இளையோர் அணியை 19 ஓட்டங்களால் வெற்றிகொண்ட கொழும்பு வடக்கு இளையோர் அணி சம்பியன் பட்டத்தை தனதாக்கியது.
ரங்கிரி தம்புளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற குறித்த இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப் போட்டி இறுதிவரை பரபரப்பை ஏற்படுத்துவதாக அமைந்தது.
கொழும்பு வடக்கு சார்பாக கவிந்து அமாமெத், சமிந்து மதுரங்க ஆகியோர் துடுப்பாட்டத்திலும், ப்ரவீன் மனீஷ பந்துவீச்சிலும் கண்டி சார்பாக சுப்புன் வடுகே துடுப்பாட்டத்திலும், ஷேஷான் யாஷொன் பந்துவீச்சிலும் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு வடக்கு அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 283 ஓட்டங்களைக் குவித்தது. மிகவும் திறமையாக துடுப்பெடுத்தாடிய ஆரம்ப வீரர் கவிந்து அமாமெத் (82) மற்றும் மத்திய வரிசை வீரர் சமிந்து மதுரங்க (50) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 91 ஓட்டங்களைப் பகிர்ந்து கொழும்பு வடக்கு அணியைப் பலப்படுத்தினர்.
மேலும் இரண்டு மத்திய வரிசை துடுப்பாட்ட விரர்களான கூஜன பெரேரா (48), ஹிரான் ஜயசுந்தர (29) ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். கண்டி பந்துவீச்சில் ஷேஷான் யாஷொன் 40 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கண்டி அணி 48.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 264 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
சுப்புன் வடுகே 2 இணைப்பாட்டங்களில் பங்களிப்பு செய்து கண்டி அணியின் வெற்றிக்காக கடுமையாக முயற்சித்த போதிலும் அவர் 93 ஓட்டங்களுடன் 5 ஆவதாக ஆட்டமிழந்ததும் அவ்வணியின் எதிர்பார்ப்பு தகர்ந்தது.
சுப்புன் வடுகே, புலிந்து பெரேரா (31) ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 30 பந்துகளில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ஆனாலும் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 3 விக்கெட்களை இழந்த கண்டி சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது. இருப்பினும் சுப்புன் வடுகே 4 ஆவது விக்கெட்டில் திசர ஏக்கநாயக்க (37) வுடன் ஜோடி சேர்ந்து மேலும் 92 ஓட்டங்களைப் பகிர்ந்து கண்டி அணிக்கு நம்பிக்கை ஊட்டினார்.
சுப்பன் வடுகே ஆட்டமிழந்த பின்னர் திசர ஏக்கநாயக்க (37), ஜயவி உயனகம (21) ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து கொழும்பு வடக்கு அணிக்கு நெருக்கடியைக் கொடுத்தனர்.
எனினும் கண்டி அணியின் கடைசி 5 விக்கெட்கள் 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிய கொழும்பு வடக்கு அணி 19 ஓட்டங்களால் வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.