யாழ்.வட்டுக்கோட்டையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் 8ம் வகுப்பு மாணவனுக்கு நடந்த சம்பவம்!
யாழ்.வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் 8ம் வகுப்பு மாணவனை பாடசாலை அறை ஒன்றில் வைத்துப் பூட்டிவிட்விட்டு சென்ற நிலையில், மாணவன் கூச்சலிட்டதால் பாடசாலையில் திருத்த வேலைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் எடுத்த முயற்சியினால் மாணவன் மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,8ம் வகுப்பு மாணவன் ஒருவன் உடல்நலமின்மை காரணமாக பாடசாலையில் உள்ள சுகாதார மேம்பாட்டு நிலையத்தினுள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான்.
பாடசாலை நிறைவடைந்த பின்னர் பாடசாலை மற்றும் குறித்த சுகாதார மேம்பாட்டு நிலையம் போன்றவற்றினை பூட்டிவிட்டு பாடசாலை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.
குறித்த மாணவன் தனது காலணிகளை சுகாதார மேம்பாட்டு நிலையத்தின் வாசலுக்கு வெளியிலேயே கழற்றிவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான். அதனை கூட அவதானிக்காமலேயே இவ்வாறு பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.
இதனையடுத்து தூக்கத்தில் இருந்து எழுந்து பார்த்த மாணவன் பாடசாலை பூட்டியிருப்பதை அவதானித்து விட்டு கூச்சலிட்டுள்ளான். இந்த சத்தத்தை கேட்ட பாடசாலையில் தச்சுவேலை செய்துகொண்டிருந்த ஒருவர் குறித்த சுகாதார மேம்பாட்டு நிலையத்தின் அருகே சென்று பார்த்தவேளை மாணவன் உள்ளேயிருப்பதை அவதானித்தார்.
பின்னர் அந்த தச்சுத் தொழிலாளி பாடசாலைக்கு அருகில் இருந்த கடைக்காரரிடம் சென்று இந்த விடயத்தினை கூறினார். கடைக்காரர் பாடசாலை நிர்வாகத்துக்கு இதுதொடர்பாக தெரியப்படுத்தியதும் நிர்வாகத்தினர் வந்து பாடசாலையை திறந்து மாணவனை வெளியே வரவழைத்தனர்.
அதன்பின்னர் பாடசாலை நிர்வாகத்தினர் மாணவனுக்கு பிஸ்கட்டும் சோடாவும் வாங்கிக்கொடுத்து மாணவனை சமாதானம் செய்தனர். அன்றையதினம் குறித்த தச்சுத் தொழிலாளியும் இல்லாமல் விட்டிருந்தால் மாணவனது நிலை என்ன என்பது யாருக்கும் தெரியாது. ஒரு பிரபல பாடசாலையில் நடந்த இந்தச் சம்பவமானது
பாடசாலை நிர்வாகத்தினரின் அக்கறையீனத்தை வெளிக்காட்டுவதுடன் விசனத்தை ஏற்படுத்துவதாக பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் தெரிவித்தனர்.