கொழும்பிலிருந்து யாழ்.மாவட்டத்திற்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டுவருவதற்கு புகைரத சேவை!

ஆசிரியர் - Editor I
கொழும்பிலிருந்து யாழ்.மாவட்டத்திற்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டுவருவதற்கு புகைரத சேவை!

யாழ்.மாவட்டத்திற்கு அத்தியாவசிய பொருட்களை கொழும்பிலிருந்து கொண்டு வருவதற்கான சரக்கு ரயில் சேவைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக புகைரத திணைக்களத்தால் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் கூறியுள்ளார்

யாழ்.மாவட்டத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு " யாழ்.ராணி " புகையிரதத்தில் பயணித்தார். 

யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை வந்தடைந்த அமைச்சர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

வரலாற்றில் முதல் தடவையாக யாழ் மக்களை கருத்தில் கொண்டு அதிகளவான சேவைகளை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்துள்ளோம். 

புதிதாக காங்கேசன்துறை  -  கிளிநொச்சி அறிவியல் நகருக்கு இடையிலான "யாழ் ராணி" சேவை , தடைப்பட்டிருந்த இரவு தபால் சேவை மீள ஆரம்பம், உத்தரதேவி மற்றும் கடுகதி சேவைகளின் தரிப்பிட நிலையங்களை அதிகரித்துள்ளமை உள்ளிட்டவற்றை செயற்படுத்தியுள்ளோம்.

இவற்றுடன், யாழ்ப்பாணத்துக்கான அத்தியாவசிய பொருட்களை கொழும்பிலிருந்து எடுத்து வருவதற்காக சரக்கு ரயில் சேவைகளை பயன்படுத்த அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்திருந்தார். அதற்குரிய திட்ட முன்மொழிவுகள் புகையிரத திணைக்களத்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதனடிப்படையில் இந்த சேவையை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளோம்.

மேலும், முல்லைத்தீவு, வவுனியா, மற்றும் அநுராதபுர மாவட்ட பணியாளர்கள், பல்கலை மாணவர்களை கருத்தில் கொண்டு, ஓமந்தை - அறிவியல் நகர் புகையிரத சேவையை ஆரம்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. 

அத்துடன் தடைப்பட்டுள்ள "ஸ்ரீதேவி" சேவையை மீள ஆரம்பிப்பதற்கு, பயணிகளின் ஆதரவை எதிர்பார்த்துள்ளதாகவும், அதிகளவு பயணிகள் பயணிப்பார்கள் என்றால் அச்சேவை மீளவும் ஆரம்பிக்கப்படும்.

இதேவேளை, பேரூந்து, முச்சக்கர வண்டி உள்ளிட்ட தனியார் போக்குவரத்து சேவைகளின் கட்டண நிர்ணயத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேற்கொள்ளும். முச்சக்கர வண்டிகளின் கட்டண அறவீடு தொடர்பாக சட்டத்திருத்தமொன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்படும். 

அத்துடன் அதிகரித்த கட்டணத்தை அறவிடுவோர் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் பொது மக்களை முறைப்பாடுகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

இவ்விஜயத்தின்போது யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன், போக்குவரத்து அமைச்சு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு