நல்லுார் மந்திரி மனையை பாதுகாப்பதற்கு நிதி ஒத்தாசை வழங்குங்கள்! யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கோரிக்கை..
நல்லுாரில் உள்ள மந்திரிமனை எதிர்வரும் மழைக்காலத்தில் இடிந்து விழுந்துவிடுமோ என்கிற அச்சம் காணப்படுவதால் அதனை மீள்நிர்மாணம் செய்வதற்கு தேவையான நிதியை பெற செல்வந்தர்களும் புலம்பெயர்ந்தவர்களும் உதவமுன்வர வேண்டுமென யாழ்ப்பாண மரபுரிமை மையத்தினர் அவசர கோரிக்கையை விடுத்தனர்.
யாழ்.ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே யாழ்ப்பாண மரபுரிமை மையத்தினர் இந்த அவசர கோரிக்கையை விடுத்தனர்.இதில் கருத்து தெரிவித்த யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தின் தலைவர் வரலாற்று துறை பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்,
தற்போது எமக்குள்ள வசதி வாய்ப்பை மீள்நிர்மாணம் செய்யும் போது பல்வேறு தடைகள் ஏற்படுகின்றது. மந்திரிமனையை மீள்நிர்மாணம் செய்து சுற்றுலாத்தலமாக மாற்ற தொல்லியல் திணைக்களம் எங்களுக்கு அனுசரணை தந்திருக்கின்றது.
இந்த பணியை செய்வதற்கு பல தடைகள் காணப்படுகின்றது. அந்தத் தடையை தாண்டி தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியோடு அதனை செய்யவுள்ளோம்.மரபுரிமை சின்னங்களினுடைய நில உரிமையாளர்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.
நில உரிமையாளர்கள் மரபுரிமை சின்னங்களை அழித்துவிட்டு வேறு பணியை செய்ய முடியாது. மரபுரிமை சின்னங்களினுடைய நிலங்களை. அன்பளிப்பாகவோ அல்லது விலைக்கோ எங்களுக்கு தந்தால் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.
புனரமைக்க வேண்டிய முந்நூறுக்கும் மேற்பட்ட தொல்லியல் சின்னங்கள் தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. அரச அனுமதியோடு புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து நிதியை பெறுவதற்கு முயல்வதோடு தனவந்தர்கள் இவ்வாறான பணிகளுக்கு உதவமுன்வர வேண்டும்.
அரசியல் வேறுபாடின்றி அனைவரும் இதில் பங்கேற்று கைகொடுக்க வேண்டும் -என்றார்.ஊட சந்திப்பில் கலந்துகொண்ட யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கருத்து தெரிவிக்கையில்,
மந்திரிமனை அமைந்துள்ள நிலத்தை கொள்வனவு செய்து முற்று முழுதாக மீள்நிர்மாணம் செய்வதாக இருந்தால் 7 கோடி இலங்கை ரூபாய் செலவாகுமென மதிப்பிட்டுள்ளோம்.
மந்திரிமனை இடிந்துவிழாதவாறு உடனடியாக அதனை பாதுகாப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்வதற்கு 5 மில்லியன் ரூபாய் தேவைப்படுமென மதிப்பிட்டுள்ளோம்.
செல்வந்தர்கள் மரபுரிமைச் சின்னங்கள் மீது அக்கறை கொண்டவர்கள் இந்தப் பணியில் கைகோர்க்கவேண்டும்.செல்வந்தர்களிடமும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் உறவுகளிடம் அமைப்புகளிடம் நாங்கள் மன்றாட்டமாக கேட்பது இந்த வேலை திட்டங்களை விரைவாக ஆரம்பிக்க உள்ளோம்.
உங்களால் இயன்ற நிதி உதவிகளை விரைவாக எமக்கு தந்தால் அவற்றை செய்து கொள்ள முடியும் என்றார்.யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தின் தலைவர் வரலாற்று துறை பேராசிரியர் ப.புஸ்பரட்ணம், மையத்தின் பதிப்பசிரியர் வ.பார்த்திபன்,
மையத்தின் உறுப்பினரும் யாழ்.மாநகர முதல்வருமான வி.மணிவண்ணன்ஆகியோர் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டனர். யாழ்ப்பாணத்திலுள்ள வரலாற்று சின்னங்களை பாதுகாத்து அதை மீள்நிர்மாணம் செய்யும் நோக்குடன்
யாழ்ப்பாணம் மரபுரிமை மையம் என்கிற அமைப்பு கடந்த வருடம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.