SuperTopAds

யாழ்.நல்லூர் ஆலய சுற்றாடலில் பக்தர்களிடம் அதிக கட்டணம் அறவிட்ட வானக தரிப்பிடம் யாழ்.மாநகரசபையினால் முடக்கப்பட்டது!

ஆசிரியர் - Editor I
யாழ்.நல்லூர் ஆலய சுற்றாடலில் பக்தர்களிடம் அதிக கட்டணம் அறவிட்ட வானக தரிப்பிடம் யாழ்.மாநகரசபையினால் முடக்கப்பட்டது!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா காலத்தில் பருத்தித்துறை வீதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக வாகனப் பாதுகாப்பு நிலையத்தில் பக்தர்களிடம் இருந்து அதிக பணம் அறவிடப்படுவதாக யாழ்.மாநகர சபைக்கு கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து அதனை உரிய முறையில் கண்காணித்து குறித்த விடயம் உண்மை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று குறித்த வாகனப் பாதுகாப்பு நிலையம் யாழ்.மாநகர சபையினால் அறிவிக்கப்பட்ட கட்டணத்திற்கு அதிக கட்டணம் அறவிட்டமையால்  யாழ்.மாநகர சபையினால் பூட்டப்பட்டது.

துவிச்சக்கர வண்டிக்கு 20 ரூபாவும் மோட்டார் சைக்கிளுக்கு 30 ரூபாவும் முச்சக்கரண வண்டி மற்றும் கார்; ஆகியவற்றுக்கு 50 ரூபாவும் வானுக்கு 100 ரூபா எனவும் யாழ்.மாநகர சபையினால் கட்டண விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ் நிர்ணய கட்டணங்களுக்கு அதிகமான கட்டணங்களை அறவிடுதல் மற்றும் மாநகர சபையின் அங்கீகாரம் பெறாத சிட்டைகளை வழங்குதல் ஆகியவை கண்டறியப்பட்டால் அவ் வாகனப் பாதுகாப்பு நிலையங்கள் உடன் மூடப்படும் என்று யாழ்.மாநகர சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய குறித்த வாகன தரிப்பிடம் யாழ்.மாநகரசபை அதிகாரிகளினால் பூட்டப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது.