கோண்டாவிலில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம்!! -யாழ்.மாநகர முதல்வர் யோசனை-
யாழ்ப்பாணத்தில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் ஒன்றினை அமைப்பதற்கான யோசனையை யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணல் முன்வைத்துள்ளார்.
யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வில் யாழ்.மாநகர சபைக்குச் சொந்தமான கோண்டாவிலில் உள்ள நீர் விநியோக கிணறு அமைந்துள்ள 11 ஏக்கர் காணியில் குறித்த மைதானத்தை அமைக்க ஏற்பாடுகள் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கோண்டாவிலில் உள்ள மாநகர சபையின் நீர் விநியோக கிணறு அமைந்துள்ள காணி சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைக்க பொருத்தமானது என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையோ நன்கொடையாளர்களோ முன்வந்தால் அதற்கான அனுமதியை வழங்கலாமா இல்லையா என சபையின் சம்மதம் இதன்போது கோரப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் ஆராய கால அவகாசம் தேவை என மாநகர சபை உறுப்பினர்களால் கருத்து தெரிவிக்கப்பட்டதால் இவ்விடயத்தை அடுத்த கூட்டத்திற்கு ஒத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டது.
வடமாகாணத்தில் அமையக் கூடியதாக ஓர் சர்வதேச தரத்திலான துடுப்பாட்ட மைதானம் அமைக்க இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் மண்டைதீவு பகுதி முன்னர் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.