SuperTopAds

யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலய சுற்றாடலில் உள்ள கடைகளில் போலி நாணய தாள்களை பயன்படுத்தி பொருட்களை வாங்கிய ஆசாமி கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலய சுற்றாடலில் உள்ள கடைகளில் போலி நாணய தாள்களை பயன்படுத்தி பொருட்களை வாங்கிய ஆசாமி கைது!

யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் திருவிழாவை ஒட்டியதாக அமைக்கப்பட்டுள்ள கடைகளில் போலி நாணய தாள்களை பயன்படுத்தி பொருட்களை வாங்கிய ஆசாமியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்கள் இரண்டு மீட்கப்பட்டதுடன்,  3 கடைகளில் வழங்கிய 3 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆலய திருவிழாவின் முதல் மூன்று நாள்களில் மூன்று வெவ்வேறு கடைகளுக்குச் சென்ற ஒருவர், போலி ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களை பயன்படுத்தி,

கச்சான், பழங்களை 200 ரூபாய்க்குள் வாங்கி மிகுதி பணத்தை பெற்றுச் சென்றுள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன.  

சம்பவம் தொடர்பில் யாழ்.மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

நல்லூரடியைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் விசாரணைகளின் பின் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

சந்தேக நபருக்கு போலி நாணயத்தாள்களை அச்சிட்டு வழங்கியவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் கூறினர்.