SuperTopAds

இலங்கையின் பெரும் பொருளாதார நெருக்கடி!! -எல்.பி.எல். ஒத்திவைப்பு: பாகிஸ்தானுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் இடமாற்றம்-

ஆசிரியர் - Editor II
இலங்கையின் பெரும் பொருளாதார நெருக்கடி!! -எல்.பி.எல். ஒத்திவைப்பு: பாகிஸ்தானுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் இடமாற்றம்-

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக லங்கா பிறீமியர் லீக் (எல்.பி.எல்) ரி - 20 கிரிக்கெட் மூன்றாவது அத்தியாயம் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி நடைபெறும் இடம் மாற்றப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் மேலும் அறிவித்துள்ளது.

நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸ், கோல் க்ளடியேட்டர்ஸ், கலம்போ ஸ்டார்ஸ், தம்புள்ள ஜயன்ட்ஸ், கண்டி பெல்கன்ஸ் ஆகிய அணிகள் பங்பற்றும் லங்கா பிறீமியர் லீக் சுற்றுப் போட்டி ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து 21 ஆம் திகதிவரை நடாத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. 

எல்.பி.எல் சுற்றுப் போட்டியின் உரிமையாளர்களான இனோவேட்டிவ் ப்ரொடக்ஷன் குறூப் குணுநு விடுத்த வேண்டுகோளை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்தது.

நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலை போட்டியை நடத்துவதற்கு ஏற்றதாக இல்லை என சுட்டிக்காட்டி சுற்றுப் போட்டியை பிற்போடுமாறு இனோவேட்டிவ் ப்ரொடக்ஷன் குறூப் கோரிக்கை விடுத்திருந்ததாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் மேலும் குறிப்பிட்டது.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இடம் மாற்றப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இன்று திங்கட்கிழமை அறிவித்தது.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த மாற்றத்தை செய்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டது. இதற்கு அமைய கொழும்பு. ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெறவிருந்த 2 ஆவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச விளையாட்டரங்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.

கிரிக்கெட் சுற்றுப் பயணம் தொடர்பான திட்டமிடல் சவால்களை சமாளிக்கும் நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.