இந்து பௌத்த நல்லுறவுக்கான சேவை அளப்பரியது..! நீதி அமைச்சர் விஜயதாச புகழாரம்...
இலங்கை இந்து - பௌத்த கலாச்சார பேரவையின் பொதுச் செயலாளர் தேசமானிய எம்.டி.எஸ் இராமச்சந்திரனின் சேவை இந்து பௌத்த நல்லுறவுக்கு ஊன்றுகலாக அமைந்துள்ளது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச புகழாரம் சூட்டினார்.
நேற்றைய தினம் இந்து பௌத்த பேரவையின் வடமாகாண தலைமையகத்தில் இடம்பெற்ற ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள மொழியில் தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இந்து பௌத்த பேரவையை திறம்பட நடத்திச் செல்கின்ற இராமச்சந்திரன் வடக்கில் நான் அறிந்த வகையில் 25,000 இற்கும் மேற்பட்டவர்களுக்கு இரண்டாம் மொழியான சிங்கள மொழியை கற்ப்பித்துள்ளார்.
அவர் இந்த சேவையை தானாக முன்வந்து தனது தனிப்பட்ட பெருமளவு நிதியை செலவு செய்து இரண்டாம் மொழியான சிங்கள மொழியை கற்பிக்க வேண்டும் என்ற ஆவலுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்.
அவரது சேவை இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக அவர் தனது சேவையை ஆற்றிவருவது இலங்கையில் வாழும் சிங்கள தமிழ் முஸ்லிம் இனங்களுக்கிடையில் சிறந்த ஒரு புரிதலையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
இந்த பௌத்த பேரவையினால் சிங்கள மொழி மட்டுமல்லாது தமிழ் மொழி தெரியாத பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பொலீசாருக்கு தமிழ் மொழியை கற்பிப்பதற்காக வகுப்புகள் ஆரம்பிக்க உள்ளமை வரவேற்கத்தக்க விடயம்.
ஆகவே தான் மொழி மூலமாக நாட்டில் மூவ் இனங்களையும் ஒற்றுமைப்படுத்துகின்ற மிகப்பெரிய கைங்கரியத்தை ஆற்றிக்கொண்டிருக்கும் இராமச்சந்திரனை நாட்டினுடைய இராஜதந்திர வட்டாரங்களுக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மாகாணக் கல்விப் பணிப்பாளர் உதயகுமார் வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் மாற்றம் இராணுவ உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.