SuperTopAds

வயோதிப பெண்ணுக்கு சோடாவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கொள்ளை! யாழ்.பண்டத்தரிப்பை சேர்ந்த 21 வயது பெண் கைது..

ஆசிரியர் - Editor I
வயோதிப பெண்ணுக்கு சோடாவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கொள்ளை! யாழ்.பண்டத்தரிப்பை சேர்ந்த 21 வயது பெண் கைது..

வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக அனுதாபம் காட்டி வயோதிப பெண்ணுக்கு சோடாவுக்குள் மயக்க மருந்து கலந்து கொடுத்த இளம் பெண் ஒருவர் வயோதிப பெண்ணிடமிருந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். 

இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் 21 வயதான இளம் பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 

வவுனியா, பண்டாரிக்குளம் நாவலர் வீதியில் வசிக்கும் முதிய பெண் ஒருவர் சுகயீனம் காரணமாக கடந்த புதன் கிழமை மருந்து எடுப்பதற்காக வவுனியா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். 

மருந்து எடுத்து விட்டு குறித்த வயோதிப பெண் வைத்தியசாலையில் சிறிது இளைப்பாறி இருந்த போது அங்கு வந்த யுவதி ஒருவர் குறித்த வயோதிப பெண்ணுடன் நீண்ட நேரமாக அனுதாபமாக உரையாடி வயோதிப பெண் தொடர்பான தகவல்களை பெற்றுள்ளார்.

உடல் சுகயீனம் என்பதால் தனியாக வீட்டிற்கு செல்ல வேண்டாம் எனத் தெரிவித்த அந்த யுவதி முச்சக்கர வண்டி ஒன்றில் வயோதிப பெண்ணின் வீட்டிற்கு அழைத்து சென்றதுடன் மயக்க மருந்து கலந்து சோடாவையும் பருக கொடுத்துள்ளார். 

வீட்டிற்கு சென்று சிறிது நேரத்தில் வயோதிப பெண் மயக்கமடைந்ததும், அவர் அணிந்திருந்த சங்கிலி, மோதிரம் மற்றும் வீட்டில் இருந்த நகைகள் என 7 அரைப் பவுண் நகையை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

மயக்கம் தெளிந்து குறித்த வயோதிப பெண் எழும்பியதும் நகைகள் திருட்டு போனதை அறிந்து கொண்டு உடனடியாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். 

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.எஸ்.ஜெயக்கொடி வழிகாட்டலில், வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் கியான் தலைமையில் 

பொலிஸ் சார்ஜன்டுகளான திசாநாயக்கா (37348), விக்கிரமசூரிய (36099), டிலீபன் (61461), உபாலி (60945) பொலிஸ் கான்ஸ்டபிள்களான சங்கயரொகான் (31043), தயாளன் (91792), திசாநாயக்கா (18219) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, வவுனியா, மதீனாநகரில் வசித்து வந்த யாழ்.பண்டதரிப்பு பகுதியைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். திருடப்பட்ட நகையில் 4 அரைப் பவுண் நகை 

குறித்த யுவதியிடம் இருந்து பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின் குறித்த யுவதியை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.