சிங்கள தேசத்தின் பொருளாதார மோதலில் தமிழர்கள் சிக்காமல் இருப்பதே உசிதம்..! தமிழர் தேசத்தின் வன்முறைகள் வேண்டாம் - சுகாஸ்
சிங்கள தேசத்தின் பொருளாதார மோதலில் தமிழ்தேசம் சிக்குப்படாமல் இருப்பதே உசிதமானது. என தமிழ்தேசிய மக்கள் முன்னணிசார்பில் சட்டத்தரணி க.சுகாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் மக்கள் தொடர்பு அலுவலக பதாகைக்கு தீ வைக்கப்பட்டமை தொடர்பான அறிக்கையிலேயே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, நாட்டின் இந்த நிலமைக்கும் தமிழ்த் தேசத்தின் அவலத்திற்கும் அங்கஜன் இராமநாதன், டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான், வியாழேந்திரன்
மற்றும் தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகளுக்குள் மறைந்திருந்து அரச நிகழ்ச்சி நிரலைக் கனகச்சிதமாக நகர்த்துபவர்களும் காரணமென்பதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை.
அதற்காகத் தமிழர் தாயகத்தில் அவர்களைத் தாக்குவதையோ அல்லது அவர்களது அலுவலகங்களுக்குத் தீ வைப்பதையோ ஜனநாயக அரசியலில் ஏற்றுக்கொள்ள முடியாது.
இவர்களுக்கான சரியான தண்டனை அடுத்த பொதுத் தேர்தலில் இவர்களுக்கு வாக்களிக்காது முற்றாகப் புறக்கணித்து இவர்களை அரசியல் அநாதைகளாக்குவதே!சிங்கள தேசத்தின் பொருளாதார மோதலில் தமிழ்த் தேசம் சிக்குப்படாது அமைதியாக இருப்பதே உசிதமானது.
தமிழர் தாயகத்திலிருந்து சிங்களக் கட்சிகளுக்கு ஆதரவளித்த மக்களில் ஒருசாராருக்குத் திருந்துவதற்கு சந்தர்ப்பமொன்றை வழங்கி அவர்களையும் தமிழ்த் தேசியத்தின்பால் ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் கருத்துருவாக்கத்தையும்
முன்னெடுப்பதே தமிழினத்தின் தேச விடுதலைக்கு வழிவகுக்கும் - வலுச் சேர்க்கும் என்று உறுதியாக நம்புகின்றோம்.கடந்த காலத்தில் தமிழ்த்தேசியத்திற்கு ஊறுவிளைவித்து சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலைத் திட்டமிட்டு முன்னெடுத்த அங்கஜன் இராமநாதன்,
டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான்,வியாழேந்திரன் மற்றும் போலித் தமிழ்த் தேசியவாதிகள் போன்றோரை எதிர்காலத்தில் அரசியல் ரீதியாகத் தோற்கடித்து தமிழ்த் தேச விடுதலைக்கு வலுச்சேர்க்க அனைவரும் சபதமெடுப்போம்.
அரசியல் தீர்வற்ற அபிவிருத்தியென்பது வெறும் மாயை என்பதை உணர்ந்து விடுதலை நோக்கிய பாதையில் விசுவாசமாகப் பயணிப்போம் என்றுள்ளது.