சிங்கள மக்கள் உண்மைகளை உணர்ந்துகொள்வதற்கு மிகச் சிறந்த தருணம் இதுதான்..! நாடாளுமன்றில் கஜேந்திரகுமார் காரசாரம்...

ஆசிரியர் - Editor I
சிங்கள மக்கள் உண்மைகளை உணர்ந்துகொள்வதற்கு மிகச் சிறந்த தருணம் இதுதான்..! நாடாளுமன்றில் கஜேந்திரகுமார் காரசாரம்...

சிங்கள தலைவர்கள் இந்த நாட்டை நாசமாக்குவதை தங்கள் கண்முன்னால் பார்க்கும் சிங்கள மக்கள் இதே சிங்கள தலைவர்களால் தமிழ் மக்கள் எத்தனை அழிவுகளை சந்தித்திருப்பார்கள் என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும்.

இந்த நாட்டிலுள்ள சிங்கள தலைவர்களுடைய உண்மை முகத்தை சிங்கள மக்கள் உணர்ந்து கொள்வதற்கான அல்லது கண்களால் காண்பதற்கான சிறந்த காலம் இதுவே ஆகும். அதனை சிங்கள மக்கள் பயன்படுத்தவேண்டும். 

மேற்கண்டவாறு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (6) சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் 

நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார் அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நிதி அமைச்சர் நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பாகவும் அரசாங்கத்தின் தவறான தீர்மானங்கள் தொடர்பாகவும் குறிப்பிட்டிருந்தார். அதேநேரம் நாட்டின் தற்போதைய நிலைக்கு முன்னர் இருந்து அனைத்து அரசாங்கங்களும் பொறுப்பு கூறவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதி தனக்கு கிடைத்த பாரிய வெற்றியின் மாயையில் தான் நினைத்த பிரகாரம் செயற்பட ஆரம்பித்தார். வரி தொடர்பான தீர்மானங்களை எடுக்கும்போது பொருளாதார நிபுணர்கள் தெரிவித்த எந்த கருத்துக்களை மதிக்காமல் செயற்பட்டார்.

ஜனாதிபதியும் அரசாங்கமும் மேற்கொண்ட ஏதேச்சாதிகாரம் காரணமாகவே நாடு இந்தநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதனால்தான் மக்கள் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துக்கு வீட்டுக்கு செல்லவேண்டும் என கோருக்கின்றனர். 

மக்கள் இவ்வாறு கோரிக்கை விடுக்கும்போது அரசாங்கம் பாராளுமன்றத்தில் ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகின்றது.அதாவது, அரசாங்கத்தில் இருந்த ஒரு பிரிவினர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வந்த நிலையில் திடீரென எதிர்க்கட்சி பக்கம் வந்து சுயாதீனமாக செயற்படுவதாக தெரிவித்தனர். 

இவர்களின் இந்த செயல் ஒரு நாடகம் என நான் ஆரம்பத்திலேயே தெரிவித்தேன். அத்துடன் அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருக்கின்றது. 

அதற்கு நாங்களும் ஆதரவளிக்க தயார். ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு பின்னர் அடுத்த கட்டமாக என்ன செய்வதென்று அவர்கள் தெளிவாக தெரிவிக்க வேண்டும். இந்த பிரச்சினைன்னு தீர்வுகாண தேர்தலுக்கு செல்ல வேண்டும்.

தேர்தல் பிற்படுத்தப்படும் பட்சத்தில் அது வன்முறைகளுக்கே வழிவகுப்பதாக அமையும். ஜனாதிபதிக்கு இராணுவத்தின் ஆதரவு அதிகம் இருக்கின்றது. வன்முறை ஏற்பட்டால் இராணுவத்தை பயன்படுத்தும் திட்டம் இருப்பதால் தான் ஜனாதிபதி பிரச்சினைக்கு தீர்வுகாணாமல் இருக்கின்றார்.?

அத்துடன் சிங்கள மக்களிம் நான் தெரிவிப்பது, சிங்கள தலைவர் ஒருவரே இந்த நாட்டை உங்கள் கண்முன்னே நாசமாக்கி இருக்கின்றது என்றால், தமிழ் சமூகத்துக்கு எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்திருப்பார்கள் என நினைத்துப்பாருங்கள் நாங்கள் சமஷ்டியை கோரும்போது அதனை சிங்கள அரசியல்வாதிகள் பொய் பிரசாரம் மேற்கொண்டு சிங்கள மக்களை ஏமாற்றி வந்திருக்கின்றார்கள்.

சிங்கள மக்களுக்கு உண்மை தெரியாது. ஆனால் இன்று அந்த உண்மை அறிந்துகொள்ள சிங்கள மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்து வருகின்றது. எனவே தங்களது சொந்த தலைவராலே நாங்கள் ஏமாற்றப்பட்டுவதை சிங்கள மக்கள் தற்போது உணர ஆரம்பித்திருக்கின்றனர் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு