அரசுக்கெதிராக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை ஒன்றிணைந்த சுகாதார சேவைகள் தொழிற்சங்கத்தினால் வைத்தியசாலைக்கு முன்னால் வெள்ளிக்கிழமை (06) முற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி சுகாதார சேவையில் காணப்படும் குறைபாடுகள் உடனடியாக நீக்கப்பட வேண்டியும் பொதுமக்களுக்கான சுகாதார சேவைகள் தங்குதடையின்றி இடம்பெற உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரி வைத்தியசாலையின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் இப்போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை வெளிப்படுத்தி தமது எதிர்ப்பினை வெளியீட்டு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.
மேலும் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உறுதிசெய்தல் மற்றும் நாட்டில் அனைவருக்கும் சட்டத்தின் ஆட்சி சமமாக பொருந்தும் சூழலை உருவாக்குதல் ,அனைத்து மக்களின் வாழ்வுரிமையை உறுதி செய்தல், மக்கள் பிரதிநிதிகள் நியமனத்திற்கு தேவையான குறைந்தபட்ச தகுதிகளுடன் , குறைந்தபட்ச தரத்தை வெளியிடுதல்,மக்கள் பிரதிநிதிகளின் சிறப்புச் சலுகைகளை இழந்து அவர்களை பொறுப்புக்கூறல் மற்றும் பொறுப்புக்கூறல், பொறிமுறைக்கு உட்படுத்துதல் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் அரசியலில் ஈடுபடும் உறுப்பினர்களை தொடர்ச்சியான கணக்காய்வுக்கு உட்படுத்தல்,அமைச்சரவை உட்பட அனைத்து மக்கள் பிரதிநிதிகளின் செயல்திறனை மதிப்பிடுவதற்கு முறையான வழிமுறையை அறிமுகப்படுத்துதல்,தேவையான அளவுக்கு தங்களுக்கு வழங்கிய பொறுப்புக்களை வினைத்திறனுடன் ஆற்ற முடியாதவர்களை அல்லது ஊழல்மிக்க அரசியல்வாதிகளை அகற்றி , அதனால் ஏற்படும் சேதத்தை ஈடுசெய்ய ஒரு குறிப்பிட்ட கொள்கையை வகுக்க வேண்டும்,அரசியல் தலையீட்டுடன் பொருளாதாரம் உட்பட நாட்டின் துறைகளுக்கும் நிலையான தேசியக் கொள்கைகளை உருவாக்குதல் , அரசியல் தலையீடு இல்லாமல் பொது நிறுவனங்களை பராமரித்தல் மற்றும் அனைத்து அரசு அதிகாரிகளும் சுதந்திரமாக நியமிக்கப்படும் முறையை உறுதி செய்தல்இஉள்ளூர் தொழில்முனைவோருக்கு முன்னுரிமை அளித்தல் ,அமைதியான போராட்டம் மற்றும் கருத்து வெளிப்படுத்தும் உரிமை உட்பட அடிப்படை ஜனநாயக உரிமைகளை உறுதி செய்தல் ,இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதாரம் ,பாதுகாப்பு போன்ற சேவைகள் மற்றும் பொது வளங்களைப் பாதுகாத்தல் போன்ற விடயங்களை துண்டுப்பிரசுரம் ஒன்றினை விநியோகித்து போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (வெள்ளிக்கிழமை) நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிற நிலையில் இதற்கு ஒத்துழைப்பு வழங்கி பல துறைசார் தொழிற்சங்கங்கள் சேவையிலிருந்து விலக தீர்மானித்துள்ளன.இது தவிர இன்றைய ஹர்த்தாலுக்கும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் கூட்டுப் போராட்டத்துக்கும் பதில் கிடைக்காவிட்டால் மே 11ஆம் திகதி முதல் அரசாங்கம் வீட்டுக்குச் செல்லும் வரை தொடர் வேலை நிறுத்தமும் தொடர் ஹர்த்தாலும் தொடரும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த ஆர்பாட்டத்தின் போது அரசுக்கு எதிரான பல்வேறு கோஷங்களை எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள் பொறுப்பு தோல்வியடைந்த அரசாங்கத்தையும் சீரழிந்த அரசியல் அமைப்பையும் முடிவுக்குக் கொண்டு வந்து நல்ல அரசியல் கலாசாரத்தையும் ஜனநாயகத்தையும் பேணிக்காக்க உண்மையான தேசப்பற்று வேலைத்திட்டத்தை உருவாக்குவதே மக்கள் போராட்டத்தின் நோக்கமாகும் என்றதுடன் குறிப்பிட்ட கால எல்லைக்குள் சட்டரீதியான தீர்வுகள் காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.