கடுமையான சர்வதேச அழுத்தத்தை எதிர்கொண்டு திணறும் இலங்கை! ரம்புக்கணை வன்முறை குறித்து ஜ.நா உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகள் கடும் சாடல்...

ஆசிரியர் - Editor I
கடுமையான சர்வதேச அழுத்தத்தை எதிர்கொண்டு திணறும் இலங்கை! ரம்புக்கணை வன்முறை குறித்து ஜ.நா உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகள் கடும் சாடல்...

நாட்டில் எரிபொருள் விலையேற்றம் உள்ளிட்ட நெருக்கடி நிலைமைகள் காரணமாக அரசுக்கு எதிராக பொது மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானமை தொடர்பில் இலங்கை கடுமையான சர்வதேச அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது. 

அமெரிக்கா, பிரித்தானியா, நோர்வே மற்றும் கனடா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபை  சர்வதேச மன்னிப்புச்சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன தங்களது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன. 

அத்தோடு இந்த சம்பவம் தொடர்பில் பக்கசார்பற்ற வெளிப்படையான  விசாரணைகளையும் சர்வதேசம் வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தனது டுவிட்டர் பதிவில் , 'ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குப் பாதிப்புகள் ஏற்பட்டதாகக் கிடைத்த செய்திகள் ஆழ்ந்த கவலையளிக்கிறது. எந்தவொரு தரப்பினரின் வன்முறையும்  அமைதியான போராட்டக்காரர்களின் உரிமைகளைத் தடுக்கிறது. மக்களைப் பாதுகாப்பதற்கும், அடிப்படை சுதந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான அவர்களின் உரிமையைப் பாதுகாப்பதற்கும் தேவையான குறைந்தபட்ச  அதிகாரத்தைப் பயன்படுத்தி போராட்டங்ளைக் கட்டுப்படுத்துவது இன்றியமையாதது.' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் , 'ரம்புக்கனையில் பதிவாகிய உயிரிழப்பினை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்தவொரு தரப்பினர் மீதான வன்முறையையும் ஐரோப்பிய ஒன்றியம் கண்டிக்கிறது. இரு தரப்பினரடமிருந்தும் கட்டுப்பாடுகள் அவசியம் என்பதை வலியுறுத்துகிறது. தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகிறது.' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச மன்னிப்புச்சபை

சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசிய பிராந்தியங்களுக்கான அலுவலகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் , 'ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதோடு , 10 இற்கும் அதிகமானோர் காயமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறித்து சர்வதேச மன்னிப்புச் கவலை கொண்டுள்ளது. அதிகாரிகள் எப்போதும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதோடு அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய எந்தவொரு எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் பதிலளிப்பதற்கு சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிக அதிகாரத்தைப் பயன்படுத்தக்கூடாது. இது குறித்து உடனடி, பாரபட்சமற்ற மற்றும் பயனுள்ள விசாரணை அவசியம்.' என்று குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கா

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது டுவிட்டர் பதிவில் , ' ரம்புக்கனையில் இருந்து வெளியாகும் பயங்கரமான செய்திகளால் நான் மிகவும் கவலையடைகின்றேன். ஆர்ப்பாட்டக்கார்கள் அல்லது பொலிஸார் என எந்தவொரு தரப்பினருக்கு எதிராகவும் இடம்பெறும் வன்முறையை நான் கண்டிக்கிறேன். எல்லா பக்கங்களிலிருந்தும் நிதானத்திற்கும் அமைதிக்குமான அழைப்பு விடுக்கப்பட வேண்டும். அத்தோடு இந்த சம்பவம் குறித்து முழுமையான, வெளிப்படையான விசாரணை அவசியம் என்பதோடு , அமைதியான போராட்டத்திற்கான மக்களின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்.' என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியா

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹூல்டன் தனது டுவிட்டர் பதிவில் , 'ரம்புக்கனையில் நடைபெற்ற போராட்டத்தில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதைக் கேட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன். இது தொடர்பில் சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணை அவசியம். எல்லா வகையிலும் வன்முறையை நான் கண்டிப்பதோடு , அவற்றின் கட்டுப்பாட்டிற்கு அழைப்பு விடுக்கிறேன். அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.' என்று குறிப்பிட்டுள்ளார்.

கனடா

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினான் தனது டுவிட்டர் பதிவில் , ' ரம்புக்கனையில் இறந்தவர் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றி கேள்வியுற்றமை ஆழ்ந்த கவலையளிக்கிறது. என் எண்ணங்கள் அவர்களின் குடும்பங்களை நோக்கி செல்கின்றன. அதிகபட்ச கட்டுப்பாடு அவசரமாக தேவைப்படுவதோடு , வன்முறையைத் தூண்டுபவர்கள் பொறுப்புக்கூற வேண்டும்.' என்று குறிப்பிட்டுள்ளார்.

நோர்வே

இலங்கைக்கான நோர்வே தூதுவர் டிரைன் ஜோரன்லி எஸ்கெடல் தனது டுவிட்டர் பதிவில் , 'ரம்புக்கனையில் ஏற்பட்டுள்ள உயிர்ச்சேதம் வேதனையளிக்கிறது.  அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் கட்டுப்பாட்டினை எதிர்பார்ப்பதோடு , வன்முறையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் வலியுறுத்துகின்றோம். சம்பவங்கள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதோடு , அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். ' என்று குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு