அரசாங்கத்தின் தீர்மானத்தால் பல நெருக்கடிகள் உருவாகி வருகின்றது
அனைத்து வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதையும் இடைநிறுத்த அரசாங்கம் எடுத்த தீர்மானத்துடன் பல நெருக்கடிகள் உருவாகி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது நாட்டின் வங்கித்துறைக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த முடிவின் மூலம் நாடு வங்குரோத்து நிலையில் உள்ளதாக அரசாங்கம் அறிவித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய கடன் வசதி மே மாதத்தின் நடுப்பகுதியில் நிறுத்தப்படும் என்றும், அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் தனியார் வணிகங்கள் ஜூன் மாதத்திற்குள் செயல்பட முடியாது என்றும் திரு விக்கிரமசிங்க கூறினார்.
எவ்வாறாயினும், தற்போது தேர்தலோ அல்லது அரசியலமைப்புத் திருத்தங்களோ நாட்டின் நெருக்கடியை தீர்க்காது என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே எவ்வித நிபந்தனையுமின்றி ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளையும் அரசாங்கம் இணைத்துக் கொள்ள வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.