SuperTopAds

புல்லுக்குள கட்டடத்தை அடாத்தாக கைப்பற்றியதா யாழ் தனியார் தொலைக்காட்சி?? சபையில் மணிவண்ணன் கேள்வி

ஆசிரியர் - Admin
புல்லுக்குள கட்டடத்தை அடாத்தாக கைப்பற்றியதா யாழ் தனியார் தொலைக்காட்சி?? சபையில் மணிவண்ணன் கேள்வி

யாழ் மாநகசபையினால் புள்ளுக்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட கட்டடத்தின் சில பகுதிகளை யாழ்ப்பாணத்திலிருந்து இயங்கும் தனியார் தொலைக்காட்சி ஒன்று கைப்பற்றி வைத்திருப்பதாக யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கட்டடத்தில் 54 கடைத் தொகுதிகள் இருப்பதாகவும் அவற்றில் பல தொகுதிகளுக்கு கட்டடம் கட்டப்பட்ட காலத்திலிருந்து வாடகை எதுவும் செலுத்தப்பட்டிருக்கவில்லை என்றும் அது தொடர்பில் தனக்கு பதில்வழங்கவேண்டும் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் இன்று சபையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதன்போது பதிலளித்த யாழ் மாநகர ஆணையாளர் குறித்த கட்டடத்தில் உள்ள 54 கடைகளில் 32 கடைகளை யாழ் மாநகரசபை பொறுப்பேற்றுவிட்டதாகவும். கட்டடம் கட்டுவதற்கு ஒப்பந்தம் வழங்கியபோது ஒப்பந்தகாரர் கட்டடத்தைக் கட்டி ஏனையவர்களுக்கு விற்பது எனவும் அதன்பின்னர் யாழ் மாநகரசபை அக்கட்டங்கைளப் பொறுப்பேற்று அதனைக் கொள்வனவு செய்தவர்களிடம் வாடகைப் பணத்தினைப் பெற்றுக்கொள்ளும் என்றும் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்து உரையாற்றிய உறுப்பினர் மணிவண்ணன் அப்படியானால் குறித்த கட்டடத்தில் யாழ் மாநகரசபை பொறுப்பேற்றிருக்காத தொகுதிகள் இன்னமும் அதனைக் கட்டிய ஒப்பந்த காரரான மனோகரன் என்பவர் வசம் உள்ளதா? அவர் அதைனை தான் வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டிக்கொள்கிறாரா உள்ளிட்ட தெளிவுபடுத்தல்கள் வழங்கப்படவேண்டும் என கேள்வியெழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட் குறித்த கட்டடம் தொடா்பில் தானும் ஆராய்ந்ததாகவும் குறித்த கட்டட ஒப்பந்தகாரர் தான் சில சிக்கல் நிலைகளில் சிக்குண்டிருப்பதாக குறிப்பிட்டதாகவும் குறிப்பிட்டதோடு யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படும் தொலைக்காட்சி ஒன்றினால் குறித்த கட்டடத்தின் சில பகுதிகள் கட்டட ஒப்பந்தகாரரான மனோகரன் என்பவரிடமிருந்து கைப்பற்றப்பட்டிப்பதாகவும் அதனை தான் சபைக்கு பகிரங்கப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

மீண்டும் அதற்குப் பதிலுரைத்த உறுப்பினர் மணிவண்ணன் மனோகரனை அழைத்து இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும் எனக் குறிப்பிட்டதோடு கால தாமதமின்றி குறித்த தொலைக்காட்சி பயன்படுத்தும் கட்டடத்தை யாழ் மாநகரசபை கைப்பற்றுவதற்கான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.