3 மாத பெண் குழந்தை இரு மாதத்தில் 7 தடவை மாறி, மாறி பலருக்கு விற்பனை!! -தந்தை உட்பட 11 பேர் கைது-
இந்தியாவின் தெலுங்கானாவில் தம்பதியினர் ஒருவரிடம் இருந்து 70 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட 3 மாத குழந்தை 7 முறை கைமாறி விற்பனை செய்யப்பட்ட அவல சம்பவம் நடந்துள்ளது.
குறித்த மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ். இவருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் அவர்களுக்கு 3 ஆவதாக பெண் குழந்தை பிறந்தது. இதனால் 3 மகள்களையும் வளர்ப்பதற்கு அஞ்சி அந்த குழந்தையை விற்க முடிவு செய்தனர்.
இதன்படி குறித்த குழந்தையை 70 ஆயிரம் ரூபாய்க்கு தரகர் மூலம் விற்றார். அந்த தரகர் குழந்தை இல்லாத தம்பதிக்கு அந்த குழந்தையை ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார்.
அவர் தனது உறவினர் உதவியுடன் ஐதராபாத்தில் சுக் பகுதியை சேர்ந்த நூர்ஜகான் என்ற பெண்ணிடம் ஒரு இலட்சத்து 87 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தார். இதையடுத்து அந்த குழந்தை பல பகுதிகளுக்கு மாற்றி மாற்றி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இறுதியாக அந்த குழந்தை ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த பெண்ணிடம் 2 இலட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து குழந்தையை பொலிஸார் மீட்டுள்ளனர். பொலிஸார் நடத்திய விசாரணையில் கடந்த 2 மாதத்தில் பச்சிளம் குழந்தை மங்கள கிரியில் இருந்து மேற்கு கோதாவரி வரை சங்கிலி தொடர் போல் அடுத்தடுத்து 7 தடவை கைமாறி பலரிடம் விற்பனை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல் வெளியானது.
இது தொடர்பில் குழந்தையின் தந்தை மனோஜ் உள்பட 11 பேரை பொலிஸார் கைது செய்தனர். மேலும் குழந்தையை பத்திரமாக மீட்டு அதன் தாயிடம் ஒப் படைத்தனர். விசாரணையில் இதன் பின்னணியில் ஒரு பெரிய குழந்தை விற்பனை கும்பல் இயங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.