யாழ்.தீவகத்தின் சில பகுதிகளில், சில பெண்கள் சமூக பிறழ்வான நடத்தையில் ஈடுபடுகின்றனர்! அவர்களுக்கு உதவ தயார் என்கிறார் ஆளுநர்..
யாழ்.தீவகத்தில் சில இடங்களில், சில பெண்கள் சமூக பிறழ்வான நடத்தையில் ஈடுபடுவதாக தமக்கு கிடைத்த தகவல் மிகுந்த வருத்தமளிப்பதாக கூறியிருக்கும் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, அவ்வாறானவர்களுக்கு உதவ தாம் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் தீவக பிரதேசத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை சாதாரண பகுதிகளோடு ஒப்பிடுகையில் கஷ்டமானது. இருந்தாலும் தீவகத்தின் சில பகுதிகளில் வாழும் சில பெண்கள் சமூக பிறழ்வான நடத்தையில் ஈடுபடுவது எனது கவனத்திற்கு வந்துள்ளது.
இது எமது சமூகத்திற்கு அவமானமாக பார்க்கிறேன். யாழ்.மாவட்ட செயலகம் ஊடாக தீவகப் பகுதிகள் தொடர்பான விவரங்களை கேட்டறிந்த நிலையில் அதிலும் பெண்களின் நிலை தொடர்பில் இவ்வாறான தகவல்கள் வெளிவருவதுவருத்தமளிக்கிறது.
ஆகவே சமூகத்திற்கு ஒவ்வாத அல்லது பிறழ்வான செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்களுக்கு ஏற்ற தொழில் துறையை ஏற்படுத்துவதற்கு வடமாகாணத்தின் ஆளுநர் என்ற வகையில் எனது பொறுப்பை நிறைவேற்ற தயாராக இருக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.