SuperTopAds

ஜனாதிபதி வருகையை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தால் பதற்றம்..!

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி வருகையை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தால் பதற்றம்..!

இலங்கையின் 17வது பல்கலைகழகமான வவுனியா பல்கலைகழகத்தை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி வடமாகாணத்திற்கு வருகைதந்த நிலையில் ஜனாதிபதி வருகையை எதிர்த்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் எதிர்ப்பு போராட்டங்களை நடாத்தியிருக்கின்றனர். 

இதன்போது போராட்டத்தை பொலிசார் தடுத்துநிறுத்தியமையால் வவுனியா மன்னார் பிரதான வீதியில் பதட்டமான சூழல் ஏற்ப்பட்டிருந்ததுடன், பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரன்பாடு ஏற்ப்பட்டது.வவுனியா பல்கலைக்கழகத்தின் ஆரம்பவிழா நிகழ்வு 

பம்பைமடு பகுதியில் அமைந்துள்ள பல்கலைகழக வளாகத்தில் ஜனாதிபதியின் தலைமையில் இன்று காலை இடம்பெற்றது.இதனையடுத்து ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைகழகத்திற்கு முன்பாக காணாமல் போனவர்களின் உறவினர்களால் ஆர்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

ஆர்பாட்டம் இடம்பெறவிருந்த குறித்த பகுதிக்கு செல்ல முற்பட்ட காணாமல் போனவர்களின் உறவினர்களை பம்பைமடு இராணுவ சோதனைசாவடியில் குவிக்கப்பட்டிருந்த பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் வழிமறித்து முன்செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.

இதனால் ஆர்பாட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் முரன்பாடு ஏற்ப்பட்டதுடன், குழப்பநிலை ஏற்ப்பட்டது.எமது உறவுகள் காணாமல் போகவில்லை. காணாமல் ஆக்கப்பட்டார்கள். நாங்கள் இந்த நாட்டின் பிரயை இல்லையா, நடமாடுவதற்கான சுதந்திரம் எமக்கில்லையா,

எங்களை மட்டும் எப்போதுமே எதற்காக தடுக்கிறீர்கள் நாங்கள் பயங்கரவாதிகளா, எமக்கு எப்போதுமே கம்பிவேலி பிரயோகம் தானா? என்று பொலிசாரைபார்த்து அவர்கள் கேள்வி எழுப்பினர். கொலைக்குற்றவாளியே நாட்டின் ஐனாதிபதியாக இருக்கிறார். அவர்களை நம்பியே நாம் எமது பிள்ளைகளை ஒப்படைத்தோம். 

எனவே அவரிடம் நாம் சில கேள்விகளை கேட்கவேண்டும். அதற்கு அனுமதி வழங்குமாறுபோராட்டக்காரர்கள் தெரிவித்தபோதும் அதனை பொருட்படுத்தாத பொலிசார் அவர்களை முன்செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் குறித்த பகுதியில் பதட்டமான சூழல் ஏற்ப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் குறித்த போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதுடன் இருவரை மாத்திரம் வந்து ஜனாதிபதியை சந்திக்குமாறு கோரினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் நாம் அவரை சந்திக்கவரவில்லை 

எங்கள் அனைவரையும் முன்செல்ல அனுமதிக்குமாறு கோரியதுடன். கொலைக்குற்றவாளி எப்படி நீதிபதியாக மாறமுடியும் என்றனர். இருமணி நேரத்திற்கும் மேலாக குறித்த பகுதியில் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அவர்களை வழிமறித்து முன்செல்ல முடியாதவாறாக நின்றனர். 

இந்நிலையில் போராட்டக்காறர்கள் திரும்பிச்சென்றனர்.