SuperTopAds

யாழ்.மாதகல் கடலில் நடந்தது என்ன? இருவேறு கதைகளை கூறுவதாக கடற்படை மீது மக்கள் குற்றச்சாட்டு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாதகல் கடலில் நடந்தது என்ன? இருவேறு கதைகளை கூறுவதாக கடற்படை மீது மக்கள் குற்றச்சாட்டு..

யாழ்.மாதகலில் கடற்படையின் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்தியவரே மாதகல் கடலில் இடம்பெற்ற படகு விபத்தில் கொல்லப்பட்டார் என பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

நேற்றுமுன்தினம் இரவு மீன்பிடிக்கச்சென்ற மாதகல் பகுதி மீனவர் ஒருவர் (எட்வேட் மரியசீலன் -வயது 31) நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து சக மீனவர்கள் மற்றும் உறவினர்கள் கருத்து தெரிவிக்கையில், 

காலை 06.30 மலையளவில் தொழிலில் இருந்து கரைக்கு திரும்பும்போது, மாதகல் படகு மீது கடற்படையின் ரோந்து படகு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என கடற்படையினர் எமக்கு தெரிவித்தனர்.

அத்துடன், மாதகல் கடலில் சடலமாக மீட்கப்பட்ட நபர் வீடு திரும்பாத நிலையில் அவரை தேடி நாம் சென்றபோது எம்மை கடற்படையினர் மிரட்டி அனுப்பினார்கள். பின்னர், கடலின் கரையோரத்தில் அவரது சடலம் 

தலையில் பலத்த காயங்களுடன் கிடப்பதாக சிலர் தெரிவித்ததை அடுத்து நாம் அப்பகுதிக்கு சென்று சடலத்தை பார்த்தோம். மேலும், அவ்விடத்திற்கு வந்த கடற்படையினர் இந்திய ரோலர் படகு மோதியதினாலையே குறித்த விபத்து இடம்பெற்றதாக தெரிவித்தனர்.

ஆனால், குறித்த விபத்து இடம்பெற்ற இடத்திற்கு இந்திய இழுவை படகு நுழையவே முடியாது. கரையில் இருந்து 200 மீற்றர் தூரத்தில், கடலின் அடியில் பாறை காணப்படும், ஆகவே பாரிய படகுகள் இங்கு அண்மையாக வர முடியாது. 

அதேவேளை, உயிரிழந்தவர் கடந்த காலங்களில் இடம்பெற்ற மாதகல் காணி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்ட நபர் ஆவார். கடலில் தொழிலுக்கு செல்லும் நமக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை, பாதுகாப்பு தரவேண்டியவர்களுக்கு பயந்தே 

கடலுக்கு செல்ல வேண்டும் என்றால் நாம் எங்கு போவது எவ்வாறு தொழில் செய்வது?பாதுகாப்புக்கு வருபவர்களே , படகால் மோதி எம்மை சாகடிக்கிறார்கள் என மேலும் குற்றம்சாட்டியுள்ளனர்.