யாழ்.மாவட்டத்தின் 10 தொகுதகளிலும் 10 தொழிற்சாலைகளை நிறுவுவேன்! சஜித் பிறேமதாஸ யாழ்ப்பாணத்தில் உத்தரவாதமளிப்பு..
யாழ்.மாவட்டத்தில் 10 தேர்தல் தொகுதிகளிலும் 10 தொழிற்சாலைகளை நிறுவுவேன் என எதிர்க்கட்சி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிறேமதாஸ யாழ்ப்பாணத்தில் உறுதியளித்துள்ளார்.
நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வலி, வடக்கு மாவை கலட்டி, கொல்லங்கலட்டி பகுதியில் இடம்பெற்ற மக்களுடனான கலந்துரையாடலிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அனைவரும் அறிவீர்கள். நாட்டில் படித்த இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த தொழில் வாய்ப்பு இல்லாத நிலையில் சிறந்த திட்டங்களை வகுத்துச்
செயற்படுத்துவதற்குரிய தலைமைத்துவமும் இல்லை. யாழ்.மாவட்டத்தில் 15 பிரதேச செயலாளர் பிரிவுகள் பத்து தேர்தல் தொகுதிகள் உள்ள நிலையில் இவை அனைத்திற்கும் சென்றவன் என்ற அடிப்படையில்
மக்கள் பிரச்சனைகள் பற்றிய நன்கு தெரியும். குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து கொண்டு காங்கேசன்துறை மக்களின் பிரச்சினையைத் தீர்க்க முடியாது .நாட்டில் வாழும் மக்கள் மத்தியில் பல்வேறு தேவைப்பாடுகள்
மற்றும் தீர்க்க வேண்டிய பல பிரச்சனைகள் உள்ளதை நான் அறிவேன். அதன் காரணமாகவே இயலுமானவரை மக்கள் மத்தியில் சென்று அவர்களின் குறைகளை கேட்டு வருகிறேன்.
யாழ்.மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்திருக்கிறேன் காங்கேசன்துறையில் வைத்து என்னால் உறுதிமொழியை வழங்கமுடியும் யாழ் மாவட்டத்தில் உள்ள 10 தேர்தல் தொகுதிகளிலும்
10 தொழிற்சாலைகளை எனது ஆட்சியில் நிறுவேன்.நாட்டில் தற்போது மக்கள் நிம்மதியாக வாழமுடியவில்லை ஆட்சியாளர்கள் தொடர்பில் மக்கள் விரக்தியின் விளிம்பில் சென்றிருக்கிறார்கள்.
அகவே மக்களைப் புறந்தள்ளி நடக்கும் அரசாங்கத்துக்கு எதிராக மக்களுடன் மக்களுக்காக பயணிக்கும் அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்கிரமரத்ன புத்திக பத்திரன மற்றும் சஜித் பிரேமதாசவின் இணைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளருமான உமா சந்திரபிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.