நான் என்ன கேட்டேன் என்பதை சரியாக அறியாமல் அரசியல் செய்யாதீர்கள்..! ஆளுநர் காட்டம்..
யாழ்.ஆரியகுளம் தொடர்பான என்ன விடயத்தை நான் கேட்டேன் என்பதை சரியாக அறிந்து கொள்ளாமல், அரசியல் செய்யாதீர்கள். என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறியிருக்கின்றார்.
விகாராதிபதியால் ஆரிய குளத்தில் மதநல்லிணக்க மண்டபம் ஒன்றை அமைத்து தருமாறு மாநகரசபையிடம் கோரிக்கை விடப்பட்டது. அதனை அவர்கள் மறுத்து விட்டார்கள். நான் யாழ். மாநகர முதல்வரிடம்
ஆரிய குளத்தில் அதிகாலை வேளையில் உடற் பயிற்சி மற்றும் யோகாவை மேற்கொள்பவர்களுக்கு இலகுவாகவும் மத நல்லிணக்கத்தின் ஓர் அங்கமாக மதங்களின் பாடல்களை இசைப்பதற்கு எனது விருப்பத்தை தெரிவித்தேன்.
முதல்வர் சபையுடன் கதைத்து பதில் சொல்வதாக தெரிவித்த நிலையில் பதில் கிடைக்காததால் ஆரியகுளம் யாருக்கு சொந்தம் என கேள்வி கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நான் இந்து மதத்தைச் சேர்ந்தவனாக இருக்கின்ற நிலையில்
ஏனைய மதங்களையும் சம உரிமையுடன் பாதுகாப்பேன். கண்டி தலதா மாளிகையில் அழகிய மகாவிஷ்ணுவின் உருவச் சிலை இருக்கிறது அதற்கு பூ வைத்து வழிபடுகிறார்கள் அதேபோல் யாழ்.நாக விகாரையிலும்
இந்து மத கடவுள்களின் உருவப் படங்களை வைத்து வழிபடுகிறார்கள்.நான் ஆரிய குளத்தில் பௌத்த மயமாக்கலை மேற்கொள்ளப் போகிறேன், மத அடையாளங்களை நிறுவப் போகிறேன் என்ற பொருள் கோடலில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகிறது.
ஆரியகுளம் யாழ். நகரப்பகுதியில் அமைந்துள்ளதால் அதிகாலை வேளையில் உடற்பயிற்சி செய்பவர்கள் யோகா செய்பவர்கள் ஒன்று கூடும்போது இறையியல் பாடல்களை ஒலிப்பது மன அமைதியை ஏற்படுத்தும் என்ற நோக்கத்திலேயே முதல்வரிடம் கூறினேன்.
ஆரிய குளத்தில் மதங்களின் இறையியல் பாடல்களை இசைப்பது மத குரோதங்களை ஏற்படுத்தாது இதை அரசியலாக்குபவர்களால் தான் தேவையற்ற குழப்பம் ஏற்படுகிறது.
மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஆரியகுளம் மட்டும்தான் இடம் அல்ல.நான் எனது செயற்பாட்டில் உறுதியாக இருக்கிறேன் வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்வேன்.
ஆகவே வடக்கில் மத நல்லிணக்கத்தின் முன்னோடியாக ஆளுநர் செயலகத்திலிருந்து எனது செயற்பாடுகளை ஆரம்பிப்பேன் என அவர் மேலும் தெரிவித்தார்.