வளைபாத குறைபாட்டிற்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை! வைத்திய நிபுணர் கோபிசங்கர்..
வளைபாத (club foot) பிறவிக் குறைபாடுள்ளவர்களுக்கான சிகிச்சைகள் அனைத்தும் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படுகிறது. என யாழ்.போதனா வைத்தியசாலையின் என்பு முறிவு வைத்திய நிபுணர் வைத்தியர் ரி.கேபிசங்கர் தெரிவித்தார்.
நேற்றையதினம் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் வளைபாத பிறவி குறைபாட்டினால் சுமார் 3000-3600 பேர் வரை பாதிக்கப்படுவதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றது. இந்த குறைபாடு பெண்களை விட ஆண்களையே அதிகம் தாக்குவதோடு
50 தொடக்கம் 60 வீதமானவர்களுக்கு இரண்டு காலிலும் இந்த குறைபாடு ஏற்படுகின்றது. இதற்கான சிகிச்சை முறைகள் இலங்கையில் கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலை, கண்டி தேசிய வைத்தியசாலை
அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திலும் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. தனியார் நிறுவனத்தின் அனுசரணையுடன்
சர்வதேச தரத்திலான சிகிச்சை முறைகளுடன் குறித்த குறைபாட்டினை குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகள் தற்போது இடம்பெற்றுவருகின்றது. இந்த குறைபாடு ஆயிரத்தில் ஒருவருக்கு ஏற்பட கூடியதாக இருக்கின்ற நிலையில்
அதனை அறிந்து கொள்வதற்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு போதாமல் உள்ளது. விழிப்புணர்வை அதிகரிக்கும் முகமாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் ஊடாக குடும்பநல உத்தியோகத்தர்களுக்கு
வளைபாத குறைபாடு தொடர்பில் வழிகாட்டி கருத்தரங்கு இடம்பெறுகிறது. குடும்பநல உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் கிராம மட்டங்களில் இருந்து குறைபாடுள்ளவர்களை இனங்காண்பதற்கும்,
இனங்கணப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தபின் அவர்களை கவனிப்பதற்கும் குடும்பநல உத்தியோகத்தர்களின் உதவி பெறப்படவுள்ளது.பாத வளைவு குறைபாடானது கருவுற்ற காலத்திலும் ஏற்பட கூடிய வாய்ப்புகள் உள்ள நிலையில்
சிலருக்கு பரம்பரையாகக் கடத்தப்படுகிறது எனவும் ஆய்வுகளில் கூறப்படுகிறது. இந்த குறைபாடு குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு ஏற்படும்போது பெற்றோர்கள் மற்றும் அயலவர்கள் குறித்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.
யாழ் போதனா வைத்தியசாலையில் பதிவு செய்வதன் மூலம் இலவசமாக இந்த குறைபாட்டிற்கான சிகிச்சையைப் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.