யாழ்.நவாலியில் சடலமாக மீட்கப்பட்டவரின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் மல்லாகம் நீதிமன்றில் மனு தாக்கல்..!
கடந்த செப்ரெம்பர் மாதம் மர்மமானமுறையில கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட முன்னாள் போராளியான மாணிக்கம் ஜெயக்குமாரின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாயை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான இவர் கடந்த செப்ரெம்பர் மாதம் 28ம் திகதி வழமைபோல் நடைப் பயிற்சிக்கு செல்வதாக கூறி வெளியில் சென்றிருந்த நிலையில் வீடு திரும்பவில்லை. 2 நாட்களின் பின்னர் செப்ரெம்பர் 30ம் திகதி மாலை
குறித்த நபர் நவாலி பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவரது உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதென அப்போதே நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவரது நண்பர்கள் கூறியிருந்தனர். எனினும் அவரது குடும்பத்தினர் தமது பாதுகாப்பு கருதி இது தொடர்பில் எதனையும் கூறவில்லை.
இருப்பினும் இவரது வீட்டிற்கும் இவர் சடலமாக மீட்கப்பட்ட பகுதிக்கும் இடையில் நெடுந்துாரம் காணப்பட்டதையடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் காரணமாக இவருடைய உடல் நீதிமன்ற கட்டளையின் படி உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் புதைக்கப்பட்டது.
விசாரணைகள் இடம்பெற்று குறித்த வழக்கு எதிர்வரும் 10ம் திகதி நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட திகதியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் அதனால் அவர் தனது உயிரை மாய்த்திருக்கலாம் எனவும் பல செய்திகள் பரப்பபட்டிருந்தமையினை
தற்போது அறிந்த குடும்பத்தினர் அதனை முற்றிலும் மறுத்துள்ளதுடன் அவர் நல்ல சுகதேகியாக இருந்தார் எனவும், தவறான முடிவெடுக்கும் நிலையில் அவர் இருக்கவில்லை எனவும் அவரது உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாகவும் கூறி நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு 10ம் திகதி தவணையிடப்பட்டுள்ளதால் அன்றைய தினம் நேற்றய விண்ணப்பமும் பரிசீலிக்கப்படும் என நீதிமன்று தவணையிட்டுள்ளது. ஜெயக்குமார் 1994ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டுவரை விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினராகவும்
அரசியல்துறையில் நிதி தொடர்பான விடயங்களில் ஒரு பொறுப்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி வி.திருக்குமரன் மன்றில் விண்ணப்பம் செய்திருந்தார்.