மின்வெட்டு அமுலானபோது வீடு புகுந்து பெண்கள் மீது தாக்குதல்! இருவர் யாழ்.போதனா வைத்தியசலையில் அனுமதி, நடவடிக்கை எடுக்க பொலிஸர் தயக்கம்..
மின்சாரம் தடைப்பட்டிருந்த நிலையில் வீடு புகுந்து பெண்கள் மீதும், சிறுவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியதுடன், 16 வயதான சிறுமியை துஷ்பிரயோகம் செய்வதற்கு முயற்சித்த நிலையில் 13 வயது சிறுமி மிளகாய் துாளை ரவுடி கும்பல் மீது வீசி விரட்டியடித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில், பொலிஸாருக்கு முறைப்பாடு கொடுக்கப்பட்டு ரவுடிகள் சிலரை அடையாளம் காட்டியபோதும் பொலிஸார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. என பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, நேற்று முன்தினம் நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டிருந்த நிலையில் சிலவத்தை - தீர்த்தக்கரை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த 7 பேர் கொண்ட ரவுடி குழு வீட்டிலிருந்த பொருட்களையும்,
வீட்டிலிருந்த பெண்களையும் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளது. குறித்த தாக்குதலில் இருவர் படுகாயமடைந்தனர். அதற்கு பின்னரும் 16 வயதான சிறுமியை வீட்டிற்கு வெளியே இழுத்துச் செல்வதற்கு ரவுடிகள் முயற்சித்துள்ளனர்.
இந்நிலையில் வீட்டிலிருந்த 13 வயதான சிறுமி ரவுடிகள் மீது மிளகாய் துாளை வீசிய நிலையில் ரவுடிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். குறித்த வீட்டிலிருந்த கர்ப்பவதி பெண் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அம்புலன்ஸ் வண்டி ஊடாக முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸாருக்கு உடனடியாகவே தொலைபேசி அழைப்பை எடுத்து சம்பவம் தொடர்பாக தொியப்படுத்தியதுடன், ரவுடிகள் குறித்தும் தகவல் வழங்கியுள்ளனர். எனினும் வீடு புகுந்து தாக்குதல் நடத்தி,
சிறுவர் துஸ்பிரயோக முயற்சியில் ஈடுபட்ட ரவுடிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவும், இதனால் தொடர்ந்தும் வீட்டிலிருக்க அச்சப்படுவதாகவும் கூறியுள்ளனர். இதேவேளை குறித்த ஒரு சம்பவம் மட்டுமல்லாம்
இதே கிராமத்தில் ரவுடிகளால் பல அசௌகரியங்கள் நிகழ்வதாகவும், சம்பவம் தொடர்பாக பொலிஸார் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும். எனவும் பாதிக்கப்பட்டவர்கள் கேட்டுள்ளனர்.