வடமாகாண மக்களின் தொழில்துறை மேம்பாட்டுக்கு ஜேர்மன் வழங்கும் உதவிகள் அதிகரிக்கப்படும்..!
வடமாகாணத்தில் தொழில்துறைஅபிவிருத்தியில் ஜேர்மன் அரசாங்கத்தின் பங்களிப்பு தொடர்ந்தும் அதிகரிக்கப்படும்.என ஜேர்மன் துதுவர் ஹோல்டர் ஸுபேட் தெரிவித்தார்.
நேற்றைய தினம் புதன்கிழமை சுன்னாகத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற யாழ்.மாவட்ட வர்த்தக தொழில்துறை மன்றத்தின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மூன்று நாள் விஜயமாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தேன் மிகவும் பயனுள்ள விஜயமாக கருதுகிறேன். வடக்கு மக்களுக்கு ஜேர்மன் அரசாங்கம் தொழில்துறை சார்ந்த உதவிகளை வழங்கி வருகிறது.
வடமாகாணத்துடனான எமது உறவை ஆழமாக விரும்புகிறோம். ஜெர்மன் வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து செயற்படுவதற்காக யாழ்.மாவட்ட வர்த்தக தொழில்துறை மன்றத்தை தெரிவு செய்துள்ளோம்.
ஆகவே வடமாகாண மக்களுக்கு ஜெர்மன் அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்ககூடிய அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம் .என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இலங்கைக்கான ஜேர்மன் வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதி அன்றியாஸ், வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் உதவி அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்
மற்றும் யாழ் வர்த்தக தொழில்துறை மன்ற பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.