யாழ்.மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 1000 மில்லியன் ரூபாய் பணத்தை காணவில்லை..! அங்கஜன் சபையில் சுட்டிக்காட்டு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 1000 மில்லியன் ரூபாய் பணத்தை காணவில்லை..! அங்கஜன் சபையில் சுட்டிக்காட்டு..

நல்லாட்சி அரசாங்க காலத்தில் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆயிரம் மில்லியன் ரூபாக்கான திட்டம் உரிய முறையில் மக்களுக்கு சென்றடையவில்லை என யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், அங்கஜன் இராமநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்றைய தினம் சனிக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம் ஒன்றிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நல்லாட்சி அரசாங்கத்தில் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு கூட்டுறவு அபிவிருத்திக்காக 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. 

எனினும் அந்த திட்டம் என்ன ஆனது? அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி எங்கே என்பது தொியவில்லை. ஒதுக்கப்பட்ட நிதிகளுக்கான திட்டங்களை வழங்கியவர்களும் செயற்படுத்தியவர்களும் முறையாக மேற்கொள்ளாததன் விளைவே இன்று அதன் பலன்களை மக்கள் அடைய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட மருதங்கேணி அரிசி ஆலை மற்றும் கோப்பாய் பிரதேச செயலருக்கு ஒதுக்கப்பட்ட வாழைக்காய் பொரிக்கும் இயந்திரம் என பல திட்டங்கள் உரிய பலனை கொடுக்கவில்லை. 

தற்போதைய அரசாங்கமானது மக்களுக்கு எது உகந்ததோ அதனை மக்களிடம் கேட்டு அபிவிருத்திகளை மேற்கொள்கிறது.யாழ் மாவட்டத்தில் கிராமத்துக்கு 30 மில்லியன் திட்டம் மிகவும் வெற்றிகரமாகத் தெரிவுகள் இடம்பெற்றுள்ள விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

மேலும் யாழ்.மவட்டத்தில் இளைஞர்களின் தேவையற்ற செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு விளையாட்டுதுறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் நடவடிக்கையால் மைதானங்களை புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு வருகிறது.

இதன்போது குறுக்கிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அதற்கு பதிலளித்த அங்கஜன் இராமநாதன் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் அபிவிருத்தி குழு கூட்டங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தாம் அழைப்பு விட்டதாகத் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு