ஜே.வி.பி கார்த்திகை வீரர்களை நினைவுகூர முடியுமெனில், நாம் ஏன் மாவீரர்களை நினைவுகூரமுடியாது
ஜே.வி.பி கார்த்திகை வீரர்களை நினைவுகூர முடியுமெனில், நாம் ஏன் மாவீரர்களை நினைவுகூரமுடியாது என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் எழுப்பியுள்ளார்.
மாவீரர்நாள் நினைவேந்தல் தொடர்பாக முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு காவல் துறையால் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட தடை உத்தரவு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை மதிக்கின்றோம் . காவல் துறை இந்த விடயத்தில் ஒரு பாரபட்சமாக நடக்கின்றார்கள்.
மாவீரர் நாள் நிகழ்வினை தமிழ்மக்கள் அனுஷ்டிக்கக்கூடாது என்ற நிலையில் பல நீதிமன்றங்கள் ஊடாக தடை உத்தரவினை பெற்று எல்லோருக்கும் வழங்கி வருகின்றார்கள். கடந்த 13 ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணி கட்சியினர் யாழ்ப்பாணத்தில் கார்த்திகை வீரர்கள் தினம் என்று நினைவுகூர்ந்துள்ளார்கள்.
இதற்கு நாங்கள் எதிர்ப்பல்ல கார்த்திகை வீரர்கள் நினைவுதினம் என யாழில் வந்து நினைவுகூர முடியுமானால் எங்கள் மக்கள் ஏன் தங்கள் உறவுகளை எண்ணி மாவீரர்களை நினைவுகூரமுடியாது என்பதுதான் என்னுடைய கேள்வி.
தமிழ்மக்கள் தங்கள் உறவுகளை நினைவு கூருவதற்கு எதிராக நீதிமன்றத்தினை நாடிச் சென்றவர்கள் ஏன் சிங்களவர்களை நினைவுகூருவதற்காக ஜே.வி.பி யினர் செய்த நடவடிக்கை அல்லது செய்யப் போகின்ற நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் ஊடாக எடுக்கவில்லை என்பது எங்கள் கேள்வி.
காவல் துறை இந்த விடயத்தில் தமிழர்களுக்கு ஒரு நீதியாகவும் சிங்கள இனத்தவர்களுக்கு ஒரு நீதியாகவும் நடக்கின்றார்களா என்பது எங்களின் கேள்வியாக இருக்கின்றது. இப்படியான பாராபட்சமான நடவடிக்கையினை செய்யவேண்டாம் என வலியுறுத்துகின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.