வடமாகாண ஆளுநர் செயலகம், அமைச்சுக்களை நோண்டி ஆராயும் ஆளுநர்..! இடமாற்றத்திற்கு முண்டியடிக்கிறார்களாம் அதிகாரிகள்..
வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் முறைகேடுகள், அதிகார துஸ்பிரயோகங்கள் நடைபெற்றுள்ளதா? என்பது குறித்து ஆராய ஆரம்பித்துள்ள நிலையில் ஆளுநர் செயலகத்தில் பணியாற்றும் பல அதிகாரிகள் இடமாற்றத்திற்கு முண்டியடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாகாண அமைச்சுக்கள், திணைக்களங்களில் இடம்பெற்ற முறைகேடுகள், அதிகார துஸ்பிரயோகங்கள் தொடர்பாக ஆளுநருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், இதனடிப்படையில் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதா? என்பதை ஆராய்வதற்கு ஆளுநர் முனைப்பு காட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.
குறிப்பாக அண்மையில் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்த ஆளுநர் அதிகாரிகளின் முறைகேடுகள், அதிகார துஸ்பிரயோகங்கள் தொடர்பில் முறைப்பாடு இருப்பின் வழங்குமாறு கேட்டிருந்தார். இந்நிலையிலேயே ஆளுநர் விசாரணைக்கான முனைப்பை காட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் ஆளுநர் அலுவலகம், அமைச்சுக்கள், திணைக்களங்களில் சந்தேகத்திற்கிடமான நிர்வாக மற்றும் நிதி விடையதான கோப்புக்களை ஆராய ஆரம்பித்துள்ளாராம் ஆளுநர். குறிப்பாக மேலதிக நேர கொடுப்பனவுகள், வாகன பயன்பாடு, அரச நிதி கையாளுகை குறித்து விசேடமாக ஆராயப்படுகிறதாம்.
ஆளுநரின் இந் நடவடிக்கையினால் பல முக்கிய அதிகாரிகள் இடமாற்றத்திற்கு விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.