யாழ்.தென்மராட்சியில் மக்கள் பயன்படுத்தும் வீதியை மூடிய மேதாவிகள்! தினசரி குளத்திற்கு நடுவால் நடந்து அந்தரிக்கும் மக்கள்..
யாழ்.தென்மராட்சி - இராமாவில், தாவளை, இயற்றாளை கிராம மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் வீதியை தனியார் சிலர் அடைத்து வைத்துள்ளதால் மக்கள் குளத்திற்குள்ளால் நடந்துவந்து தமது தேவைகளை தீர்க்கும் துர்ப்பாக்கிய நிலை உருவாகியிருக்கின்றது.
இதனால் மாணவர்கள் தமது கல்விச் செயற்பாட்டை மிகுந்த சிரமத்தின் மத்தியில் மேற்கொள்கின்றனர். இடுப்பளவுக்குள்ளான குளத்து நீரிற்குள்ளால் பாடசாலைக்குச் செல்லும் துன்பியல் ஏற்பட்டுள்ளது.
சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக பயண்படுத்திவரும் இவ் வீதியை தனியார் சிலர் அது தமது காணி எனத் தெரிவித்து குளத்துடன் இணைத்து வீதியையும் மறித்து வேலியினை அடைத்துள்ளனர்.
இதன் பிரகாரம் தனியார் காணிக்காரர்கள் வீதியை மறித்தும் குளத்தின் ஒருபகுதியை இணைத்தும் தமது எல்லையை இட்டுள்ளனர். இதனால் சுமார் 35 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் பாரிய வெள்ளத்தின் மத்தியில் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர். இவ் வீதியானது சாவகச்சேரி பிரதேச சபை வீதி வரைபடத்தில் குறியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விடயம் தொடர்பில் சாவகச்சேரி பிரதேச செயலாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது மேற்படி குறித்த விடயம் தொடர்பில் தமது கவனத்திற்கு வந்ததாகவும் பிரதேசசபையுடன் கலந்துரையாடி தீர்வொன்றை எட்டுமாறு கூறியதாக கூறினார்.