வடமாகாண சுகாதார தொண்டர்களுக்கான நியமனம் வழங்கலில் முறைகேடா..? நடந்தால் நிரூபியுங்கள் என்கிறார் சுகாதார அமைச்சின் அப்போதைய செயலாளர்..
வடமாகாண சுகாதார தொண்டர்களுக்கான நேர்முக தேர்வில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக நிரூபித்தால் எவர் முன்பாகவும் பதிலளிக்க தயார் என வடமாகாண சுகாதார அமைச்சின் முன்னாள் பதில் செயலாளர் எஸ்.தெய்வேந்திரம் கூறியிருக்கின்றார்.
நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து மேலும் அவர் மேலும் தெரிவிக்கையில், 2019ம் ஆண்டு சுகாதார தொண்டர்களுக்கான நேர்முகத்தேர்வு இடம்பெற்றது. குறித்த நேர்முக தேர்வானது மிகவும் வெளிப்படைத் தன்மையுடன்
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் சகல மாவட்டங்களிலும் இடம்பெற்றது. குறித்த நேர்முகத்தேர்வு முடிவுற்று இரண்டு வருடங்கள் கழிந்த நிலையில் அதில் முறைகேடுகள் இருப்பதாக சிலர் கூறுகின்றனர். நியமனத்தை வழங்கும்போது அரச நியமனம் தொடர்பான
கொள்கையின் அடிப்படையிலும் அப்போதைய ஆளுநரின் அதிகாரங்களுக்கு உட்பட்டு குறித்த நியமனக் கடிதங்கள் தகுதியானவர்களுக்கு அனுப்பப்பட்டது. குறித்த நியமனத்தில் முறைகேடு இருப்பதாக சில ஊடகங்கள் எனது பெயரை குறிப்பிட்டு எழுதிய நிலையில் அதனைத் தெளிவுபடுத்த தவற முடியாது.
தவறினால் நானும் அந்தப் பிழையை ஏற்றுக் கொண்டதாக அமைந்து விடும். எனக்கு சில கேள்விகள் எழுகின்றன. நியமனத்தில் முறைகேடு இருக்குமானால் இரண்டு வருடங்களாக நடவடிக்கை எடுக்காததோடு வழங்கப்பட்ட நியமனக் கடிதங்களை ஏன் இரத்துச் செய்யவில்லை?
அடுத்ததாக முறைகேடு இடம்பெற்றால் ஏன் எவரும் ஆதாரங்களுடன் இதுவரை எவரிடமும் முறையிடவில்லை? சுகாதார தொண்டர்கள் நியமனத்தில் அவர்களுடன் நேர்முகத்தேர்வுக்கு தோற்றியவர்களுக்கு எவ்வாறான அடிப்படையில் என்னென்ன விடையங்களுக்கு புள்ளி வழங்கப்பட்டதென நன்கு தெரியும்.
தற்போது எழுந்துள்ள பிரச்சனை சுகாதார தொண்டர்கள் மத்தியில் எழுந்த பிரச்சினையாக நான் பார்க்கவில்லை. யாரோ ஒரு மூன்றாவது தரப்பு இதனை வழி நடத்துவதாகப் பார்க்கிறேன். ஆகவே குறித்த சுகாதார தொண்டர் நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றதென யாராவது
ஆதாரங்களுடன் முன் வருவார்களானால் எவர் முன்னிலையிலும் எப்போது வேண்டுமானாலும் பதிலளிக்கத் தயாராக இருக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.