13ம் திகதிவரை கனமழை தொடரும், வெள்ள அனர்த்தங்களுக்கான முன்னாயத்த நடவடிக்கைகள் தேவை! விரிவுரையாளர் நா.பிரதீபராஜா..
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 13ம் திகதிவரை கனமழைக்கு வாய்ப்புக்கதாக கூறியிருக்கும் யாழ்.பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா, வெள்ள அனர்தங்கள் தொடர்பில் மக்கள் முன்னாயத்தங்களை செய்யவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் கடந்த செவ்வாய் கிழமை உருவான தாழமுக்கம் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.
இத்தாழமுக்கம் எதிர்வரும் 12.11.2021 அன்று இந்தியாவின் தமிழ்நாட்டிலே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இத்தாழமுக்கத்தின் பாதிப்பு வலயத்தில் எமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகள் உள்ளடக்குகின்றன.
எனவே எதிர்வரும் 13.11.2021 வரை தொடர்ச்சியாக மழை கிடைக்கும். எனினும் 10.11.2021 புதன்கிழமை காலை முதல் 12.11.2021 வெள்ளிக்கிழமை காலை வரை எமக்கு அதிகூடிய மழை வீழ்ச்சி மற்றும் பலமான காற்று வீசும் காலமாக கணிப்பிடப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் திரட்டியதாக 150 மி.மீ. இனை விட கூடுதலாக மழை கிடைக்க வாய்ப்புள்ளது. இக்காலப்பகுதி பொது மக்கள் மிக அவதானமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டிய காலப்பகுதியாகும்.
வெள்ள அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொள்வது கனமழை மற்றும் வேகமான காற்று மூலம் எமக்கு ஏற்படும் பாதிப்புக்களை இயலுமான வரையில் குறைக்கும். என கூறிப்பிட்டுள்ளார்.