யாழ்.வலி,கிழக்கில் பாடசாலை மாணவர்கள் பயன்படுத்திய பாதையை மூடி மதில்! நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள்..
யாழ்.வலி, கிழக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்கு பயன்படுத்திய சுமார் 50 வருடத்திற்கு மேற்பட்ட பாதை தற்போது மூடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பாடசாலைக்கு அருகில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதற்கு இலகுவாக வடமேற்கு திசை ஊடாக பல வருடங்களாக பாதை ஒன்றை பயன்படுத்தியுள்ளனர்.
குறித்த பாடசாலைக்குச் செல்லும் பாதையை அப்போதைய காணியின் தத்துவக்காரர்கள் ஒருமித்து பாடசாலை மாணவர்கள் செல்வதற்கான பாதையாக பாடசாலைக்கு வழங்கியதாக பாடசாலைச் சமூகம் தெரிவிக்கிறது.
எனினும் பிற்பட்ட காலங்களில் காணிகளை விற்பனை செய்ததன் மூலம் புதிய தத்துவக்காரர்களில் ஒருவர் குறித்த பாதையின் முடிவுப்பகுதியை கொள்வனவு செய்ததன் காரணமாக பாதையை மூடி மதில் அமைத்துள்ளார்.
மதில் அமைத்த காணியின் உரிமையாளர் காணியை கொள்வனவு செய்தபோது விற்பனையாளர் பாடசாலைக்கு செல்லும் பாதையை நீக்காமல் முழுவதுமாக விற்பனை செய்தாரா? என்ற சந்தேகமும் எழுகின்றது.
இவ்வாறான நிலையில் குறித்த காணியில் மதில் கட்டப்படும்போது வலி கிழக்கு பிரதேச சபையின் அனுமதி பெறப்படாமல் கட்டப்பட்டதாக பிரதேச சபை உறுப்பினர் ஐங்கரன் குற்றச்சாட்டினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் குறித்த பகுதியில் பிரதேச சபையின் அனுமதி பெறப்படாமல் மதில்சுவர் அமைக்கப்படுவதாக பிரதேச சபைக்கு தெரியப்படுத்தப்பட்டது.
இன் நிலையில் பிரதேச சபையின் அனுமதியைப் பெற்று காணியில் மதில் சுவர் அமைக்குமாறு பிரதேச சபையினால் எழுத்துமூலமான அறிவித்தல் ஒட்டப்பட்ட நிலையிலும் அதனை மீறி மதில் கட்டப்பட்டதாகத் தெரிவித்தார்.
மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதற்காகப் பயன்படுத்தி வந்த தற்போது அடைக்கப்பட்ட பாடசாலையின் பாதையை திறந்து விடுமாறு கோப்பாய் மத்தி கிராம அபிவிருத்திச் சங்கம் அப்பகுதி மக்களின் கையெழுத்துடன்
பிரதேச சபைக்கு எழுத்து மூலமான ஆவணம் ஒன்றையும் வழங்கியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் வலி கிழக்குப் பிரதேச சபையின் செயலாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த இரு தரப்பினருடைய
ஆவணங்களும் கிடைக்கப்பெற்ற நிலையில் தமது சபைச் சட்டத்தரணி வெளி மாவட்டத்தில் நிற்பதால் அவர் வருகை தந்தது குறித்த விடையம் தொடர்பில் ஆராயவுள்ளதாகத் தெரிவித்தார்.