SuperTopAds

“ஒருநாடு ஒரு சட்டம்” செயலணியை நிராகரித்த தமிழ்பேசும் கட்சிகள்! பிரிவினையை வளர்க்கும் என சாடல்..

ஆசிரியர் - Editor I
“ஒருநாடு ஒரு சட்டம்” செயலணியை நிராகரித்த தமிழ்பேசும் கட்சிகள்! பிரிவினையை வளர்க்கும் என சாடல்..

ஒரு நாடு ஒரு சட்டம் என்ற கோட்பாட்டை உருவாக்கபோவதாக கூறும் ஜனாதிபதி செயலணி இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் பாரிய பிளவுகளை உருவாக்கி பிரிவினையை வளர்க்கும் ஆபத்தை கொண்டிருக்கின்றது. 

அத்தனை ஒரு ஜனாதிபதி செயலணியை நாங்கள் அடியோடு நிராகரிக்கிறோம். என யாழில் கூடிய தமிழ்பேசும் கட்சிகள் கூட்டாக தீர்மானம் எடுத்துள்ளதாக ஊடகங்களிடம் கூறியிருக்கின்றனர். 

தமிழ் பேசும் சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களும், முக்கியஸ்த்தர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்று (2) யாழ்ப்பாணத்தில் நடத்திய கூட்டத்தில் 

முக்கிய தீர்மானங்கள் சில மேற்கொள்ளப்பட்டன.அதன்படி, தமிழ் பேசும் மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்துவரும் அரசியல் தீர்வு என்பது அவர்களின் அரசியல் அபிலாஷைகளைத் திருப்திப்படுத்தக்கூடிய முறையிலேயே 

அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தும் அதேவேளையில், எமது மக்கள் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு, பின்வரும் தீர்மானங்களை அவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். 

என்ற கோரிக்கையோடு நாம் முன்வைக்கின்றோம் என ஆரம்பத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாட்டின் அரசியல் சாசனத்தில் அமைந்திருக்கும் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். 

மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் விரைவாக நடத்தப்படவேண்டும். அரசாங்கத்தினாலும், அரசாங்க ஆதரவுடனும் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட காணி அபகரிப்புகள் நிறுத்தப்படவேண்டும்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு, அதன் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைவரும் விடுதலை செய்யப்படவேண்டும். பல்லின, பல்மொழி, பல்மத மக்கள் வாழும் இந்த நாட்டில் “ஒரே நாடு ஒரே சட்டம்” 

என்ற கோட்பாட்டை முன்னெடுப்பதற்கும் நடைமுறைப்படுத்துவதற்குமாக அமைக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி செயலணி மக்களுக்கிடையில் ஒற்றுமை இன்மையையும், பிரிவினையையும் ஏற்படுத்தக்கூடிய 

பாரிய ஆபத்தைக் கொண்டிருப்பதால் அதனை திட்டவட்டமாக நாம் நிராகரிக்கின்றோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளும் 

கலந்து கொள்ளக்கூடியதாக எமது அடுத்த சந்திப்பு இருவாரங்களுக்குள் நடாத்தப்படும் என்றும் பிரஸ்தாப தீர்மானங்களின் இறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்படி தீர்மானங்களை தமிழீழ விடுதலை இயக்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, 

தமிழ்தேசிய கூட்டணி என்பன கூட்டாக வெளியிட்டுள்ளன.