கொள்கை உறுதியுடன் உள்ளோருடன் விக்னேஸ்வரன் புதிய அணியை உருவாக்கினால் பங்காளியாகும் சாதக முடிவை முன்னணி எடுக்கும்

ஆசிரியர் - Admin
கொள்கை உறுதியுடன் உள்ளோருடன் விக்னேஸ்வரன் புதிய அணியை உருவாக்கினால் பங்காளியாகும் சாதக முடிவை முன்னணி எடுக்கும்

“தமிழ் மக்கள் பேரவையிலுள்ள பொது அமைப்புக்களுடன் இணைந்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூட்டு ஒன்றை உருவாக்கினால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அதில் இணைந்து கொள்ள சாதகமாகப் பரிசீலிக்கும்”

இவ்வாறு தமிழ் தேசிய மக்கள முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கூட்டமைப்புடன் கொள்கை ரீதியாக முரண்பட்டு வெளியேறும் முதலமைச்சர், கொள்கையில் உறுதியாகவுள்ளவர்களுடன் இணைந்து புதிய கட்சியை ஆரம்பிக்கப் போகிறார் என்பது வரவேற்கத்தக்கது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினராகவும் அந்தக் கட்சியின் சார்பான முதலமைச்சராகவும்தான் விக்னேஸ்வரன் இயங்கி வருகிறார். தற்போது அவர் அந்தக் கட்சியிலிருந்து விலகி, புதிய கட்சியை ஆரம்பிக்கப் போகிறார் என்பது வரவேற்கத்தக்கது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து அவர் வெளியேறுகிறார் என்பது எங்களைப் பொறுத்தவரை முக்கியமானது. அதுவும் கூட்டமைப்பினருடன் முரண்பட்டு வெளியேறுவது மிக முக்கியமானது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைதான் இன்று தமிழ் தேசியத்தின் சாபக்கேடாக மாறியிருக்கின்றனது.

அத்துடன், முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆரம்பிக்கும் கட்சி எவ்வாறு இயங்கப்போவது என்பதும் முக்கியமானது. கூட்டமைப்பின் கொள்கையுடன் ஒன்றித்துப் பயணிக்க முடியாது எனக் குற்றஞ்சாட்டித்தான் அவர் இந்த முடிவை எடுத்தால், எதிர்காலத்தில் இயங்கப்போகின்ற தரப்புகள் யார் என்பதும் முக்கியம்.

தமிழ் மக்கள் பேரவையிலுள்ள மற்றொரு கட்சியான ஈபிஆர்எல்எப் உடன் இணைய தமிழ் தேசிய மக்கள் முன்னணி பேச்சு நடத்தியது. எனினும் கூட்டமைப்பின் கொள்கையை விட மோசமான கொள்கையுடைய தமிழர் விடுதலைக் கூட்டணி, சிறிரெலோ, ஈரோஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் ஈபிஆர்எல்எப் இணைந்ததால் அந்த முயற்சியைக் கைவிட்டோம்.
எனவே முதலமைச்சர் விக்னேஸ்வரனாக இருந்தால்கூட கொள்கையுடன் உறுதியாக உள்ள தரப்புகளுடன் இணைந்து செயற்படவேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடு்.

கொள்கையுடன் உறுதியாக இருக்கக் கூடிய தமிழ் மக்கள் பேரவையில் உள்ள பொது அமைப்புக்களின் உறுப்பினர்களைச் சேர்த்து கூட்டு ஒன்றை அமைத்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் இயங்குவதாக இருந்தால், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அதில் இணைவதை சாதகமாகப் பரிசீலிக்கும்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் எப்படிப்பட்டவர்களுடன் எதிர்காலத்தில் இயங்கப் போகிறார்? அவரது புதிய கட்சி எந்த எந்தத் தரப்புகளுடன் கூட்டுச் சேரப்போகின்றது? ஆகிய கேள்விகளுக்கு சரியான பதில் கிடைக்கவேண்டும்.

தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற மாஜைக்குள் இருந்து வெளியேறத் தொடங்கியுள்ளனர். அந்தக் கட்சியின் வாக்கு வங்கியில் அரைவாசிக்கு மேல் கடந்த தேர்தலில் வீழ்ச்சி கண்டுள்ளது.

பலமான மாற்றுக்கு சரியான அடித்தளத்தை நாம் போட்டிருக்கும் வேளையில்தான் முதலமைச்சரின் இந்த அறிவிப்பு – அவரது சிந்தனை வந்துள்ளது – என்றார்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு