ஆசிரியர்களது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படல் வேண்டும்

ஆசிரியர் - Admin
ஆசிரியர்களது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படல் வேண்டும்

இன்று நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் 24 வருடங்களாக போராடும் ஆசிரியர்களது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படல் வேண்டுமென வலியுறுத்தியுளார். 

கடந்த 88 நாட்களாக வீதியில் நின்று போராடும் ஆசிரியர்களுக்கு எதிராக பாடசாலைகளை ஆரம்பித்து மக்களை திருப்புவதற்கு அரசு சதித்திட்டம் வகுக்கிறது . மக்கள் அதற்குப் பலியாகக்கூடாதென வலியுறுத்தினார். அரவது உரையின் முழுவிபரம் வருமாறு.  

இன்று நாட்டின் இடையாண்டு நிதிநிலை அறிக்கை குறித்து விவாதித்துக்கொண்டிருக்கின்ற இந்த வேளையிலே இந்த நாட்டின் ஆசிரிய மற்றும் அதிபர் சமூகத்தினர் கடந்த பலமாதங்களாக வீதிகளில் நின்று போராடிக்கொண்டிருக்கிறார்கள் .

உண்மையில் எமது சமூகத்தில், தம்மை விடவும், தாம் அடைந்ததை  விடவும் வல்லவர்களாக, சிறந்தவர்களாக தமது மாணவர்களை உருவாக்குவதையே தமது வேலையாக கொண்டவர்கள் ஆசிரியப்பெருந்தகைகள்.

 தாம் அடைந்த சமூக அந்தஸ்திலும் பார்க்க கூடிய நிலையை தமது மாணவர்கள் அடைய வேண்டும் என்பதையே அவர்கள் தமது இலக்காக கொண்டு இயங்குகிறார்கள். 

தமது மாணவர்கள் தம்மை விடவும் சமூகத்தில்  உயர்ந்த நிலைக்கு சென்று சாதிக்கிறார்களா என்பதையே ஆசிரியர்கள் தமது அடைவுக்கான  அளவுகோலாக பார்க்கிறார்கள்.

அவர்களது அப்படிப்பட்ட மனோபாவத்தால் தான் நாம்  போற்றத்தக்க நிலையில் ஆசிரியர்களையும் அதிபர்களையும் வைத்து பார்க்கின்றோம். 

அப்படிப்பட்ட ஒரு உன்னதமான சமூகத்தினர் தான் 24 ஆண்டுகளுக்கு முன்னர் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட மிக மோசமான ஒரு தீர்மானத்தால் இன்றும் வீதிகளில் நின்று போராடிக்கொண்டு நிற்கிறார்கள். 

பி.சி பெரேரா ஆணைக்குழு, ஆசிரியர்களை தமது அறிக்கையிலிருந்து புறம் தள்ளத்தீர்மானித்திருந்தது. அதனைத் தொடர்ந்து வந்த அரசாங்கங்களும்  அந்த தீர்மானத்தை ஏற்றுகொள்ளும் ஒரு பிழையான நடவடிக்கையையே தொடர்ந்தன. 

இந்த அரசாங்கம் கூட, தான் ஆட்சிக்கு வந்தவுடன், சுபோதினி ஆணைக்குழு எனும் ஆணைக்குழுவை நியமித்து அந்த ஆணைக்குழு விரிவான ஆழமான ஆய்வுகளை மேற்கொள்ளவும் அனுமதித்திருந்தது. 

அந்த ஆய்வுகளின் பயனாக ஒரு விரிவான அறிக்கையை சுபோதினி ஆணைக்குழு சமர்ப்பித்திருந்தது. அந்த அறிக்கையை ஆசிரியர் சங்கமும் ஏற்றுக்கொண்டிருந்தது.  ஆனால் அரசாங்கம் அந்த அறிக்கையை நடைமுறைப்படுத்த தவறிவிட்டது. இந்த அரசாங்கத்தால்  நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையை அமுல்படுத்துமாறும் அவ்வாறு அமுல்படுத்தினால் தாம் தமது போராட்டங்களை கைவிடுவதாகவும்  இந்த அரசாங்கத்திடமே ஆசிரியர் சங்கங்கள் கேட்டிருந்தன. 

ஆனால் கோவிட் பெருந்தொற்று மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த அறிக்கையை அமுல்படுத்த முடியாதென கூறிய போது, ஆசிரியர் சங்கங்கள் நாட்டின் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு தமது நிலைப்பாட்டிலிருந்து மேலும் இறங்கி வந்து, ஒரு இடைக்காலத் தீர்வாக, ஆகக்குறைந்தது 2018 ஆம் ஆண்டு அப்போதைய அரசின் அமைச்சரவை குழுவினால் இது குறித்து பல சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையையேனும் அமுல்படுத்துமாறு கேட்டிருந்தார்கள். 

ஆனால் அதற்கு இணங்குவதற்கு கூட இந்த அரசு இன்னமும் தயாராக இல்லை. ஆசிரியர் சங்க கோரிக்கைகளுக்கு பதிலாக, அந்த 2018 ஆம் ஆண்டு அறிக்கையின் சிபாரிசுகளை நான்கு கட்டங்களாக நான்கு ஆண்டுகளில் அமுல்படுத்துவதாக இப்போது கூறுகிறது. அப்படியிருக்கவும், 2018ம் ஆண்டு முன்வைக்கப்பட்ட அறிக்கையின் சிபாரிசுகளையேனும் ஒரே தடவையில் நிறைவேற்றி, அந்த அறிக்கையின் சிபாரிசுகளையும் சுபோதினி ஆணைக்குழுவுன் முன்மொழிவுகளுடன்  இணைத்துக்கொள்ளுமாறும், அப்படி செய்தால், தாம் தமது போராட்டங்களை  கைவிட்டு, மீண்டும் உடனடியாக பணிக்கு திரும்புவதாகவும் ஆசிரியர் சங்கங்கள் கேட்டிருக்கிறார்கள். 

உண்மையில் ஆசிரிய ,அதிபர் சமூகத்துக்கு இந்த விடயத்தில்  கடந்த 24 வருடமாக மிக பிழையானதொரு அநீதி இழைக்கப்பட்டு இருக்கின்றது என்பதை ஒவ்வொரு  அரசாங்கமும் ஏற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில், அப்படி கடந்த 24 வருடமாக  தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்ற சமூகமான  ஆசிரிய அதிபர் சமூகத்திடமிருந்து மேற்கூறியதை விட  வேறொரு நியாயமான நிலைப்பாட்டை எதிர்பார்க்க முடியாதெனவே நான் கருதுகின்றேன். 

உண்மையில், இந்த நாட்டின் அடிப்படை  வளர்ச்சிக்கும் ஆரோக்கியமான சமூகத்தின் உருவாக்கத்திற்கும் பொறுப்பான, உலகின் வளர்ச்சியுடன் போட்டியிட்டு இணைந்து செல்லக்கூடிய ஆளுமை உடையவர்களை உருவாக்க கூடிய ஆசிரிய ஃ அதிபர் சமூகத்தின் நலனை பேணுவதற்கு எந்தவொரு ஆர்வமுமற்றே அரசாங்கம் இருக்கிறது. 


ஆசிரியர்கள் அதிபர்கள் உள்ளிட்ட கல்வி சமூகத்தின் நலன்களை உரியவகையில் பேணினால் மட்டுமே, எமது பிள்ளைகளும் நாளை இந்த உலகத்துடன் போட்டியிட்டு முன்னேறக் கூடியவகையில் உருவாகுவர்கள்  என நாம் எதிர்பார்க்க முடியும். ஆனால் யதார்த்தம் என்னவெனில் அப்படிப்பட்ட ஒரு உன்னதமான சமூகம், கவனிப்பாரற்று புறந்தள்ளப்பட்ட சமூகமாகாவே கடந்த 24 வருடங்களாக அரசாங்கங்களால் நடாத்தப்பட்டுவருகிறது.

2012 ஆம் ஆண்டு 3000 மில்லியன் ரூபாக்கள் ஆசிரியர்களிற்காக     ஒதுக்கப்பட்டு அவர்களது நிலமை சரி செய்யப்படும் என அப்போதைய அரசாங்கத்தால் அன்றைய ஆசிரியர் சங்கத்துக்கு உறுதி மொழியொன்று வழங்கப்பட்டிருந்தது. ஆனால் ஒதுக்கப்பட்ட அந்த 3000 மில்லியன் ரூபா பணத்திற்கு  என்ன நடந்தது என பார்த்தால் அது எங்குபோனதென ஒருவருக்கும் ( ஆசிரியர் சங்கத்துக்கு ) தெரியாது. 

எப்படியான ஒரு பரிதாபகரமான நிலையில் ஆசிரியர் சமூகம் நடத்தப்பட்டிருக்கிறது என்பது இதிலிருந்து அனைவருக்கும் புரியும். 

இது நிச்சயமாக நிறுத்தப்பட வேண்டும். இந்த அரசங்கம் தனது குடிமக்களின் நலனில் உண்மையாக அக்கறை செலுத்துவதாக இருந்தால், இந்த ஆசிரியர் சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலமை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். 

உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதற்கு நீங்கள் பில்லியன் கணக்கில் செலவிடுகின்றீர்கள். அதற்கப்பால் ஊழல் மூலம் பெருமளவு கறுப்புப் பணத்தை பெற்றுக் கொள்கின்றீர்கள். 

ஆனால் தம்மை விட உயர்வானவர்களை உருவாக்குவதற்காக அடிமைகள் போல உழைத்துக்கொண்டிருக்கும் ஆசிரியர்களை  நடுத்தெருவில் விட்டிருக்கிறது இந்த அரசு. இப்படியான பாதையிலேயே இந்த அரசு செல்லுமானால், நிச்சயம் வரலாற்றின் பழிச்சொல்லுக்கு இந்த நாடு இலக்காகும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். 

ஆசிரியர்கள் போராடிக் கொண்டிருக்கும் இந்த நிலமையில், இருநூறுக்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளை எதிர்வரும் ஒக்டோபர் 21 ம் திகதி முதல் மீளத்திறக்கப்போவதாக அரசு அறிவித்திருக்கிறது. தமது உரிமைகளுக்காக ஒரு புறம் ஆசிரியர்கள் போராடிக்கொண்டிருக்க ,  அவர்களோடு பேசி ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு தயாரற்ற நீங்கள், என்ன நோக்கத்தோடு பாடசாலைகளை மீளத்திறக்கும் அறிவித்தல்களை விடுக்கிறீர்கள்? ஆசிரியர்களுக்கு எதிராக மக்களை திருப்புவதற்காகவே நீங்கள் இந்த வேளையில் இதை செய்ய முற்படுகிறீர்கள். 

ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க்காது, பாடசாலைகளை திறப்பதன் மூலம் மக்களை ஆசிரிய சமூகத்திற்கு எதிராக திருப்ப முற்படும் இந்த அரசின்  கபடத்தனமான பொறிக்குள் விழுந்து விட வேண்டாம் என இந்த நாட்டின் அனைத்து மக்களையும் நாம் கேட்டுக்கொள்கிறோம். 

தமது சட்டைப்பைகளை நிரப்பிக்கொண்டு,  அதேவேளை, தொடர்ச்சியாக 24 ஆண்டுகளாக மிக மோசமான அநீதிக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஆசிரிய பிரச்சினைகளை கவனிக்க மறுக்கும் இந்த அரசின் மோசமான சூழ்ச்சியை புரிந்து கொள்ளுங்கள். ஏற்கனவே தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட ஆசிரிய சமூகத்தை குற்றவாளிக்கூண்டில் ஏற்றும் அரசின் கபட முயற்சிக்கு   தயவு செய்து துணை போகாதீர்கள் என மக்களை கேட்டுக்கொள்கிறோம். 

இந்த நிலையில் இன்று கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமர திசநாயக்க அவர்களால் அறிக்கை 27/2  சமர்ப்ப்பிக்கப்பட்ட போது , கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களால்  எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ம் திகதி வரவுசெலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் போது ஆசிரியர்களின்  பிரச்சினை கருத்தில் எடுக்கப்படும் என பதிலளிக்கப்பட்டிருந்தது. 

அப்படியாயின் அந்த உறுதிமொழியை ஏன் இப்போதே இந்த சபையில் வழஙக் முடியாது ?  அதுமட்டுமின்றி வரவு செலவு திட்டத்தில் என்ன வகையில் அவை தீர்க்கப்படும் என எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 
 
உண்மையில் நவம்பர் 21 ம் திகதி ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கைகளுக்கான தீர்வுகள் வழங்கப்படுமென நீங்கள் உறுதியாக கூறுவீர்களானால்,  ஏன் இப்போதே அந்த உறுதி மொழியை ஆசிரியர் சங்கங்களிடம் தெரிவித்து அவர்களுடன் ஒரு உடன்பாட்டிற்கு வந்து அவர்களது போராட்டத்தை நிறுத்தக் கூடாது? 

அதிலும்,  ஆசிரியர் சங்கங்கள்,  2018 அமைச்சரவை குழு அறிக்கையையேனும் ஒரே தடவையில் நிறைவேற்றி, அந்த சிபாரிசுகளையும் சுபோதினி ஆணைக்குழு அறிக்கையுடன் இணைக்குமாறும் அப்படி செய்தால் தாம்போராட்டங்களை கைவிட்டு பணிக்கு திரும்புவதாகவும்  மிக தெளிவாக தமது குறைந்த பட்ச கோரிக்கைகளை வெளிப்படுத்தியிருக்கிற இந்த நேரத்தில், நீங்கள் ஏன் தெளிவான ஒரு உறுதிமொழியை அவர்களுக்கு வழங்கமுடியவில்லை? மாறாக, நவம்பர் 21 ம் திகதி இந்த பிரசினைகள் கருத்திலெடுக்க்கப்படும் என்கிற  தெளிவற்ற  ஒரு மழுப்பலானபதிலையே மீண்டும்  நீங்கள் முன்வைத்திருக்கிறீர்கள். 

உண்மையில் ஆசிரியர்களும் அதிபர்களும் போதுமான அளவு கஷ்டத்தையும் நெருக்கடியையும் அனுபவித்துவிட்டார்கள். அவர்கள் அனுபவிக்கும் துன்பத்தினால் எமது பிள்ளைகளும் துயரிற்கு உள்ளாகிறார்கள். இது உடனடியாக நிறுத்தப்பட்டு அவர்களுக்கு தீர்வளிக்க வேண்டும்

Radio