இந்தியாவுக்கு தப்பிச் சென்ற ரவுடிகளான தேவா மற்றும் ஜெனி அச்சுறுத்தியதாலேயே யாழ்.மருதனார்மடத்தில் பழக்கடை வியாபாரி மீது வாள்வெட்டு! 4 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
இந்தியாவுக்கு தப்பிச் சென்ற ரவுடிகளான தேவா மற்றும் ஜெனி அச்சுறுத்தியதாலேயே யாழ்.மருதனார்மடத்தில் பழக்கடை வியாபாரி மீது வாள்வெட்டு! 4 பேர் கைது..

யாழ்.மருதனார்மடம் சந்தியில் பழக்கடை நடத்துபவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய வாள்வெட்டு குழுவை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

மேலும், யாழில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் சிலவற்றை நாட்டிலிருந்து தப்பித்து இந்தியாவில் தங்கியுள்ள தேவா மற்றும் ஜெனி இயக்குவதாக 

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்துக்கு முன்பாக பழக்கடை நடத்தும் 

மானிப்பாய் லவ் ஒழுங்கையைச் சேர்ந்த இந்திரன் நிரோஷ்குமார் (வயது-27) என்பவர் மீது கடந்த முதலாம் திகதி இரவு 7 மணியளவில் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதாவது, ஊரடங்கு நடைமுறையில் இருந்தவேளையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் முன்னிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் கழுத்து, காலில் பலத்த வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகிய அவர், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார்.

மேலும், சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரும் மேலதிக விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேரை, யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

சுன்னாகம், மல்லாகம், மானிப்பாய் மற்றும் கோப்பாய் ஆகிய இடங்களைச் சேர்ந்த 25-28 வயதுக்குட்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை சந்தேகநபர்களுக்கு வாள்களை செய்து கொடுத்த குற்றச்சாட்டிலும் ஒருவர் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

அத்துடன் சந்தேகநபர்களிடமிருந்து 3 வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் வன்முறைகளில் ஈடுபட்டு இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற 

தேவா மற்றும் ஜெனியும் அச்சுறுத்திக் கூறியதால்தான், இந்த தாக்குதலை தாம் செய்ததாக விசாரணைகளில் சந்தேகநபர்கள் கூறியுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் அனைவரும், விசாரணைகளின் பின்னர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு