SuperTopAds

யாழ்.கோண்டாவிலில் 7 பேர் காயமடைந்த வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் நீதிமன்றில் சரண்! பொலிஸ் ஆட்சேபனை இல்லாததால் பிணை..

ஆசிரியர் - Editor I
யாழ்.கோண்டாவிலில் 7 பேர் காயமடைந்த வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் நீதிமன்றில் சரண்! பொலிஸ் ஆட்சேபனை இல்லாததால் பிணை..

யாழ்.கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவரின் கை துண்டாடப்பட்டதுடன், மேலும் 6 பேர் படுகாயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர்கள் யாழ்.நீதிவான் நீதிமன்றில் சரணடைந்த நிலையில் பொலிஸார் ஆட்சேபனை தொிவிக்காமையால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

சட்டத்தரணி ஊடாக யாழ்.நீதிவான் நீதிமன்றில் நேற்று சந்தேக நபர்கள் மூவரும் சரணடைந்தபோது, கோப்பாய் பொலிஸார் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்காத நிலையில் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டது. 

கடந்த ஜூன் 30ஆம் திகதி கோண்டாவிலில் வீடொன்றுக்குள் புகுந்த அங்கிருந்த 7 பேரை கூரிய ஆயுதங்களினால் தாக்கி படுகாயம் விளைவித்தும் வீட்டிலிருந்த பெறுமதியான பொருள்களை தாக்கிச் சேதப்படுத்தியும் தீவைத்தும் வன்முறையில் ஈடுபட்டதாக கோப்பாய் பொலிஸார் 

யாழ்.நீதிவான் நீதிமன்றில் பி அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் ஏற்கனவே யாழ்.மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சந்தேக நபர்கள் நால்வரும் கடந்த ஜூலை 5ஆம் திகதி யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன் அடையாள அணிவகுப்புக்குட்படுத்த மன்று உத்தரவிட்டிருந்தது.

ஆனாலும் கொரோனா பரவல் காரணமாக சந்தேக நபர்கள் 4 பேரும் ஆகஸ்ட் 19ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டனர். அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய 3 சந்தேக நபர்கள் தலைமறைவாகியிருந்த நிலையில் 

நேற்று தமது சட்டத்தரணி ஊடாக யாழ்.நீதிவான் நீதிமன்றில் சரணடைந்தனர். சந்தேக நபர்கள் மூவரை பிணையில் விடுவிக்க அவர்களது சட்டத்தரணி பிணை விண்ணப்பத்தை மன்றில் முன்வைத்தார்.பிணை விண்ணப்பத்துக்கு மன்றில் தோன்றியிருந்த 

கோப்பாய் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. அதனால் சந்தேக நபர்கள் மூவரையும் தலா 5 லட்சம் ரூபாய் பெறுமதியான 2 ஆள் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனால் முக்கிய சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்புக்கு உள்படுத்தும் செயல்முறையும் இல்லாமல் போயுள்ளது.