SuperTopAds

நீதிமன்றத்திற்கு பொய்யான தகவல்களைச் சொல்லி தடையுத்தரவுகள் பெறப்படுகின்றனவோ?

ஆசிரியர் - Admin
நீதிமன்றத்திற்கு பொய்யான தகவல்களைச் சொல்லி தடையுத்தரவுகள் பெறப்படுகின்றனவோ?

மீண்டும் மீண்டும் இந்த அரசு கோவிட்டை சாட்டி எம் நினைவுகளைத் தடுக்க எண்ணுகின்றது,அடக்க அடக்க அதிகரிக்குமே தவிர எம் நினைவுகள் என்றும் அடங்காது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவரும்,கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் மேலும் தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்தும் செயற்பாடுகளையே அரசு மேற்கொள்கின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திலீபனின் நினைவேந்தலை நினைவு கூருவது தொடர்பில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவு இன்றைய தினம் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய அதிகாரியினால் கையளிக்கப்பட்ட நிலையில் இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்:-தமிழினத்திற்கான போராட்ட வரலாற்றின் நினைவேந்தல்களை அனுஸ்டிப்பதற்கு எதிரானவர்கள் என்று மட்டக்களப்பில் யாரும் இருக்க மாட்டார்கள்.

அப்படி இருக்க நினைவேந்தல்களுக்கு எதிரானவர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்பது பொய்யான அறிக்கையாகவே தோணுகின்றது.

பொலிஸாரினால் நீதிமன்றத்திற்கு பொய்யான தகவல்களைச் சொல்லி தடையுத்தரவுகள் பெறப்படுகின்றனவோ எனச் சந்தேகிக்கத் தோணுகின்றது.

அடுத்து கோவிட், தமிழ் மக்களின் நினைவேந்தல்களுக்கு மாத்திரம் எவ்வாறுதான் கோவிட் பரவுகின்றதோ தெரியவில்லை.

ஆளுங்கட்சி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எத்தனையோ விழாக்கள் செய்கின்றார்கள்.

திறக்கப்பட்ட களஞ்சியசாலைகளுக்கு இன்னுமொரு பெயர் வைத்து அதனை மீண்டும் திறக்கின்றார்கள்.

இந்த நிகழ்வுகளில் எல்லாம் அவர்களின் ஆதரவாளர்கள், அதிகாரிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்தும் கொள்கின்றார்கள்.

அப்போதெல்லாம் இல்லாத கோவிட் எமது நினைவேந்தல்களுக்கு மாத்திரம் எவ்வாறு வருமோ தெரியவில்லை.

மீண்டும் மீண்டும் இந்த அரசு கோவிட்டை சாட்டி எம் நினைவுகளைத் தடுக்க எண்ணுகின்றது.அடக்க அடக்க அதிகரிக்குமே தவிர எம் நினைவுகள் என்றும் அடங்காது.

அரசு மக்களின் மனங்களை வெல்வதை விடுத்து மீண்டும் மீண்டும் இவ்வாறானா செயற்பாடுகள் மூலம் தமிழ் மக்களின் மனங்களைப் புண்படுத்துகின்றது என்று தெரிவித்துள்ளார்.