தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம்

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம்
நடைபெறவிருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சம்மாந்துறை பிரதேச சபைக்கு கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் புதன்கிழமை (16) மாலை சம்மாந்துறை பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலானது சம்மாந்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி கே.டீ.எச்.ஜெயலத் வழிகாட்டலில் சம்மாந்துறை பிரதேச சபை தேர்தல் நடவடிக்கைக்கான பொறுப்பதிகாரி ஏ.எம். நௌபர் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது 2025 உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய சட்டங்கள், பொலித்தீன் பாவிப்பது தொடர்பில் தெளிவூட்டல் , சட்டவிரோமாக தேர்தல் போஸ்டர்கள் ஒட்டுதலை தவிர்த்தல் , தலை கவசமின்றி தேர்தல் பிரச்சாரம் செய்வதை தவிர்த்தல், சட்டவிரோதமாக ஊர்வலம் செல்வதை தவிர்த்தல் ,சட்டவிரோத ஒலிபெருக்கி பாவனையை குறைத்தல் தொடர்பான தெளிவூட்டலை வழங்கினார்.
மேலும் எதிர்வரும் தேர்தல் பிரச்சாரத்தின் போது பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் மற்றும் வேட்பாளர் ஒருவர் பிரச்சாரத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டன. இது தவிர தேர்தல் தொடர்பான தற்போதைய நிலைமைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டன.
குறித்த கலந்துரையாடலில் சம்மாந்துறை பிரதேச சபையில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழு வேட்பாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.