கடிதம் எழுத இழுத்தடித்தார் சுமந்திரன்! இரகசியத்தை போட்டு உடைக்கிறார் சித்தர்..
சர்வதேச ரீதியாகவோ, கொள்கை ரீதியாகவோ எந்த சந்தர்ப்பத்திலும் நாங்கள் ஒருவரையொருவர் காட்டிக்கொடுக்க மாட்டோமென புளொட்டின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன் தெரிவித்தார்.
கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்பியமை தொடர்பான சர்ச்சைக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்புவது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் இணைய வழியாக 5 கூட்டங்களை நடத்தி, ஒன்றாக கடிதம் அனுப்ப தீர்மானித்தோம். அந்த கடிதத்தை தயாரிக்கும்படி சுமந்திரனிடம் கூறப்பட்டது.
ஆனால் அவர் அதை தாமதமாக்கிக் கொண்டிருந்ததால் தான், எமக்கு சந்தேகம் ஏற்பட்டது. வழக்கமாக இப்படி காலதாமதமாக்கி விட்டு, அவர்களே கையெழுத்து வைத்து கடிதம் அனுப்பியுள்ளனர். கடந்த பெப்ரவரியில் இப்படித்தான் எல்லோரும் இருந்து கலந்துரையாடிவிட்டு தனியே சம்பந்தன், விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார், ஊர் பேர் தெரியாத சில அமைப்புக்கள் இணைந்து கடிதம் அனுப்பியிருந்தார்கள்.
இம்முறையும், அப்படியான நிலைமை ஏற்படுமென்ற ஐயம் இருந்தது. அதன் பின்னரே நாங்கள் கடிதம் அனுப்ப வேண்டிய நிலைமையேற்பட்டது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஆவணத்தில் புலிகளின் போர்க்குற்ற விசாரணை குறிப்பிடப்பட்டிருந்தது. மற்ற இரண்டு கட்சிகளும் அதற்கு இணங்க மாட்டார்கள்.
நாம் மட்டுமல்ல, இலங்கை தமிழ் அரசு கட்சி எம்.பிக்களில் சுமந்திரனும், இன்னும் ஒருவரையும் தவிர வேறு யாரும் கையெழுத்திட மறுத்துவிட்டார்கள். அதனால் தான் சம்பந்தன் மட்டுமே கையெழுத்திட்டு அனுப்பினார். தமிழ் அரசு கட்சியின் கடிதம் எல்லோருடைய கையெழுத்துடன் ஒரு இடமும் அனுப்பப்படாது என்பது தெரிந்த பின்னரே எமது கடிதம் அனுப்பப்பட்டது.
புலிகளுடன் மோதினீர்கள், அவர்களை காட்டிக் கொடுத்தீர்கள், அவர்கள் மீதான விசாரணையை கோருவதில் என்ன பிரச்சனையென இப்பொழுது சிலர் கேட்கிறார்கள். அது வேறு விடயம். ஆனால் சர்வதேச ரீதியாகவோ, கொள்கை ரீதியாகவோ எந்த சந்தர்ப்பத்திலும் நாங்கள் ஒருவரையொருவர் காட்டிக்கொடுக்க மாட்டோம். நாம் இதில் மிக தெளிவாக இருக்கிறோம்.
விடுதலைப்புலிகளை விசாரியுங்கள் என்றாலே, அவர்கள் போராடியது பிழையென்பது தான் இவர்களின் நிலைப்பாடு. இது இயக்கங்களின் போராட்டமல்ல. ஒரு சிலரை தவிர, மிகுதி ஒட்டுமொத்த தமிழர்களும் ஆயுதப் போராட்டத்தை ஆதரித்தனர். அது மக்களின் போராட்டம். அதிலே சிறு சிறு தவறுகள் நடந்திருக்கலாம். நாம் கூட்டமைப்பை விட்டு வெளியேறுவதாக எப்பொழுதும் சொன்னதில்லை.
தமிழ் மக்களின் பலத்தை உடைக்கும் நிலைப்பாட்டை நாம் எடுக்க மாட்டோம். இப்படியான பல பிரச்சனைகள் வந்து போகும். தனது தலைமைக்குள் இப்படியான பிரச்சனைகள் வராமல் பாதுகாப்பது சம்பந்தனது கடமை. அவர் அதை சரியாக செய்தால் இப்படியான பிரச்சினைகள் வராது. ஆனால் அவர் சரியாகவே செய்தார்.
அவர் உடனடியாகவே அறிக்கை விட்டார். இந்த கடிதம் எழுதியதால் கூட்டமைப்பு உடையாதென. ஆனால் அவருக்கு கீழேயுள்ளவர்கள் தான் பிரச்சனையை உண்டாக்கினர். தமிழ் அரசு கட்சியில் சிறீதரன் தலைமையில் 9 பேர் கடிதம் எழுதினார்கள். அந்த தகவல் வந்ததும், சுமந்திரன் ஒரு தொலைபேசி அழைப்பு எடுத்தார்.
அந்த அழைப்புடன் பல பேர், நாங்கள் கையெழுத்து வைக்கவில்லை என்றார்கள். பிறகு அந்த கடிதம் இணையத்தளத்தில் வெளியானது. இதன்பின் ஊடக சந்திப்பை நடத்தி, நாம் கையெழுத்திட்டது உண்மை, ஆனால் அனுப்பவில்லையென சிறீதரன் எம்.பி தெரிவித்தார்.
ஒரு ஜனநாயக கட்சியில் ஒருவர் தொலைபேசியில் அழைத்ததும் எல்லோரும் இவ்வளவு பயப்படுகிறார்கள் என்றால், அந்த ஒருவர் ஆயுத இயக்கத்தில் இருந்து, தலைவருக்கு வேண்டப்பட்டவராக இருந்து, அவரது கையில் ஒரு துப்பாக்கியும் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.