ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடர் இன்று 13 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ளது.
ஜெனிவாவில் ஆரம்பமாகும் இந்த கூட்டத்தொடர் ஒக்டோபர் 8 ஆம் திகதி வரை நடைப்பெறும். அனைத்துலக நாடுகளின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட உள்ளது.
முதல் நாளான இன்று இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான நிலவரம் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் வாய்மூல அறிக்கையை வெளியிடுவார்.
மேலும் அன்றைய தினமே ஆப்கானிஸ்தான் , வெனிசூலா , மத்திய அமெரிக்க நாடான நிகரகுவா மற்றும் மியன்மார் ஆகிய நாடுகள் குறித்தும் கவனத்தில் கொள்ளப்பட உள்ளது.
கனடா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்ற உள்ளன.
இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விடயங்கள் குறித்து இந்த நாடுகள் கேள்விகளை எழுப்பலாம்.
மறுப்புறம் ஏற்கனவே வலியுறுத்தப்பட்ட சர்வதேச பொறிமுறைக்கான அழுத்தங்களும் காணப்படும் என கணிக்கப்படுகின்றது.
அதே போன்று வெளிவிவகார அமைச்சர் பேரசிரியர் ஜீ.எல். பீரிஸ் இணைய வழியாக கலந்துக்கொண்டு உரையாற்றவுள்ளார்.
இதன் போது தேசிய நல்லிணக்கம், காணாமல் போனோர் விவகாரம் மற்றும் நட்டஈடு வழங்குதல், பயங்கரவாத தடைச்சட்டம், மனித உரிமை நிலவரம் மற்றும் அரசியல் தீர்வு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்தும் விளக்கமளிக்கவுள்ளார்.
இந்த நிலைப்பாட்டை கொழும்பில் உள்ள அனைத்துலக இராஜதந்திர மையங்களுக்கும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேரலையாக கூட்டத்தொடரை காண : https://t.co/TMoKiPmFcw