கொரோனா தொற்றாளர்களை சிகிச்சைக்கு அனுமதிப்பதிலும், சிகிச்சையளிப்பதிலும் அசமந்தம்! சாவகச்சோி வைத்தியசாலை மீது குற்றச்சாட்டு..
கொரோனா தொற்றாளர்களை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கும் விடயத்திலும், தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் விடயத்திலும் வைத்தியசாலை சாவகச்சோி வைத்தியசாலை நிர்வாகம் அசமந்தமாக செயற்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.
சுயாதீன ஊடகவியலாளரான ஞா. பிரகாஸ் கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் கடந்த 2ஆம் திகதி திடீரென ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக சாவகச்சேரி வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது,
அங்கு பதிவு நடவடிக்கைகளில் ஏற்பட்ட தாமதங்கள் உள்ளிட்டவற்றால் அவருக்கான சிகிச்சை கிடைப்பதற்கு தாமதம் ஏற்பட்டமையால் அவர் உயிரிழந்திருந்தாக பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன.
அதேவேளை பிரகாஸ் தசைத்திறன் குறைபாடு (Muscular Dystrophy) நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு , 10 வயது முதல் முற்றாக தனது நடையை இழந்து சக்கர நாற்காலியில் வாழ்ந்து வந்தவர். அவ்வாறான நோய் தொற்றுக்கு உள்ளவர்களுக்கு மூச்சு திணறல் ,
மூச்சு விடுவதில் சிரமங்கள் காணப்படும். அவ்வாறானவருக்கு கொரோனோ தொற்று உறுதியான பின்னரும் அவரை வீட்டில் இருக்குமாறே கூறப்பட்டுள்ளது. இது தொடர்பிலும் பரவலான விமர்சனங்கள் எழுந்திருந்தன.
இந்நிலையில் பிரகாஸின் சகோதரர் ஞா.கிஷோர் தனது முகநூலில் சாவகச்சேரி வைத்தியசாலை குறித்த பதிவொன்றை எழுதியுள்ளார். அதில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அவசர சிகிச்சைக்கு செல்லும் கொரோனா நோயாளிகள்
உயிர் ஆபத்தை எதிர்நோக்கும் நிலைமையே காணப்படுகின்றது. சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சென்று அன்ரிஜன் பரிசோதனை மேற்கொண்டு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்,
அவருக்கு இருக்கும் ஏனைய நோய் நிலைமைகள் தொடர்பில் வைத்தியருக்கு தெரியப்படுத்தினாலும் அவரது வீட்டில் வைத்து பாராமரிக்கவே அனுப்பப்படுகின்றார். வீட்டில் பராமரிக்கப்படுகின்ற கொரோனா நோயாளி அவசர சிகிச்சை தேவைப்படுகின்றபோது
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு சென்றால் அங்கே உடனடியாக கொரோனா விடுதிக்குள் அனுமதித்து சிகிச்சை வழங்கக்கூடிய தயார் நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை இல்லை.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலேயே பரிசோதனை செய்து கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஒருவர் மீண்டும் வைத்தியசாலைக்கு அவசர சிகிச்சைக்கு செல்லுகின்றபோது விடுதிக்குள் அனுமதிக்கப்படாமல்
சுமார் 20 நிமிடங்கள் வரையில் பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கு பின்னரேயே விடுதிக்குள் அனுமதிக்கப்படுகின்றார். இதன்போது நோயாளியின் ஒட்சிசன் அளவு பரிசோதிக்கப்பட்டு ஒட்சிசன் குறைவடைந்து செல்கின்றது என்று
அறிந்த பின்னரும் பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டே நோயாளி விடுதிக்குள் அனுமதிக்கப்படுகின்ற மனிதாபிமானமற்ற செயற்பாடு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இடம்பெறுகின்றது.
இவ்வாறு கொரோனா விடுதிக்குள் நோயாளி அனுமதிக்கப்பட்டதும் நோயாளியை பரிசோதிப்பதற்கு வைத்தியரோ அல்லது நோயாளியை கண்காணிப்பதற்கான தாதியரோ விடுதிக்குள் இல்லை என்பதுதான் மிகவும் கவலையான விடயம்.
இதனையும் விட மிகவும் மோசமான செயல் வைத்தியர் மற்றும் தாதியர் பிறிதொரு கண்ணாடி அறையில் நின்றுகொண்டு அந்த விடுதியில் நோயாளிகளை பராமரிப்பவர்களையே அவசரமாக அனுமதிக்கப்படும் நோயாளிக்கு ஒட்சிசன் கருவியை பொருத்துமாறு
தொலைபேசியில் அறிவுறுத்துவதுதான். இப்படித்தான் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் கொரோனா விடுதியின் நிலைமை காணப்படுகின்றது. இவற்றிற்கெல்லாம் வைத்தியசாலை நிர்வாகமும் வைத்திய அத்தியட்சகரும்தான் பொறுப்பு கூற வேண்டும்.
எத்தனையோ வைத்தியர்கள் மற்றும் சுகாதார துறையினர் கொரோனா நோயாளிகளுக்காக அர்ப்பணிப்போடு பணியாற்றுகின்றார்கள். அதிலும் குறிப்பாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் எந்தவித அச்சமுமின்றி துணிச்சலாக கொரோனாவுக்கு எதிராக
அர்ப்பணிப்பாக பணியாற்றுவதை நாம் தினமும் பார்க்கின்றோம். ஆனால் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் செயற்பாடு தலைகீழ். சாவகச்சேரி வைத்தியசாலையில் விஸ்தீரணமான விடுதிக் கட்டிடங்கள் வெறுமனே இருக்கின்ற நிலைமையிலும்
சாதாரண நோயாளிகள் பெரும்பாலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படாமல் ஏனைய விடுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்ற நிலைமையிலும் கொரோனா விடுதி மட்டும் முன்னர் பிரவச விடுதி இயங்கிய கட்டிடத்தில் நெருக்கடியான சூழலில் காணப்படுகின்றது.
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர் அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படுகின்ற போது அவரை உடனடியாக விடுதிக்குள் அனுமதித்து சிகிச்சையளித்த பின்னர் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதா?
தற்போதைய சூழலில் கொரோனா விடுதி செயற்படுத்தப்படுகின்ற போது போது எந்த நேரமும் நோயாளிகள் அனுமதிக்கப்படலாம் என்பதால் வைத்தியர் அல்லது தாதியர்கள் தயார் நிலையில் இருக்கக்கூடாதா?கொரோனா விடுதியில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கவும்
கண்காணிக்கவும் வைத்தியர் அல்லது தாதியர் எந்நேரமும் விடுதிக்குள் இருக்கக்கூடாதா?உண்மையில் இவற்றிற்கெல்லாம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரே பொறுப்பு கூற வேண்டும்.
அர்ப்பணிப்போடு செயலாற்றும் வைத்தியர்கள் தாதியர்கள் சுகாதார துறையினர் மத்தியில் இப்படியும் என பதிவிட்டுள்ளார்.