2வது பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணரை நியமனம் செய்வதில் இழுபறி! மாகாண சுகாதார பணிப்பாளரும், யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளருமே காரணமாம்..
வடமாகாணத்திற்கு 2வது பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவரை நியமிக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள போதும் அந்த நியமனத்துக்கு யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரும், சுகாதார சேவைகள் பணிப்பாளரும் தடையாக இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
நேற்று (06) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வாசன் இரத்தினசிங்கம் மேல்மாகாணத்தில் தற்போது 7 பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நிபுணர்களும் மத்திய மாகாணத்திற்கு 2 நிபுணர்களும் மற்றைய பிரதேசங்களிலும் அவர்களின் சேவை இடம்பெறுகின்றன.
இந்த நிலையில் வட மாகாணத்தில் ஒரே ஒரு பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நிபுணரே உள்ளார். இதற்காக அந்த பிரதேச மக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு இன்னுமொரு மருத்துவ நிபுணரை பரிந்துரைத்திருந்தது. இதன்பிரதிபலனாக பொதுசேவை ஆணைக்குழு
இதற்கான அனுமதியை வழங்கியிருந்தது. இதற்கமைய யாழ்.போதனா வைத்தியசாலைக்கு இரண்டாவது பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நிபுணருக்கான வெற்றிடத்தை உருவாக்கி அங்கு இரண்டாவது நிபுணர் ஒருவரை நியமனத்தை பொதுச்சேவை ஆணைக்குழு உறுதிசெய்திருந்தது. இவ்வாறு இந்த நியமனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளபோதும்
யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளரும், சுகாதார சேவைகள் பணிப்பாளரும் இந்த நியமனத்தை தடுப்பதாகவே எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. விசேட மருத்துவ நிபுணர் ஒருவர் அங்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ள போதும் அவருடைய பதவியானது இன்னும் சுகாதார அமைச்சினால் உறுதிப்படுத்தப்படவில்லை.
அந்த வகையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சருக்கு தமது முறைப்பாட்டை தெரிவிக்கவுள்ளது என்றார்.