SuperTopAds

யாழ்.இணுவில் காரைக்கால் சிவன்கோவில் சுற்றாடலில் நாக பாம்புகளை விடும் மக்கள்! வன ஜீவராசிகள் திணைக்கள உதவியை நாடிய நல்லுார் பிரதேசசபை..

ஆசிரியர் - Editor I
யாழ்.இணுவில் காரைக்கால் சிவன்கோவில் சுற்றாடலில் நாக பாம்புகளை விடும் மக்கள்! வன ஜீவராசிகள் திணைக்கள உதவியை நாடிய நல்லுார் பிரதேசசபை..

யாழ்.இணுவில் காரைக்கால் சிவன் கோவிலை அண்மித்த பகுதியில் சமய நம்பிக்கையினால் மக்கள் நாக பாம்புகளை கொண்டுவந்து விடுவதால் கோவிலை சூழவுள்ள மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பதாக நல்லுார் பிரதேசசபை உறுப்பினர் சி.கௌசல்யா தெரிவித்துள்ளார். 

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், சிலரின் வீடுகள் மற்றும் விவசாய காணிகளுக்குள் வரும் நாக பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களை உயிருடன் பிடித்து வந்து சிவன் கோவில்களை அண்டிய பகுதிகளில் விட்டு செல்கின்றனர். 

இந்துக்கள் மத்தியில் நாக வழிபாட்டு முறை உள்ளமையால் , நாக பாம்பை அடித்துக் கொல்வதற்கு பலருக்கும் தயக்கம். அதனால் அதனை உயிருடன் பிடித்து வந்து ஆலய சூழலில் விட்டு செல்கின்றனர்.

 புராதன ஆலயமான காரைக்கால் சிவன் கோவிலை சுற்றி பல பாம்பு புற்றுகள் உள்ளன. அந்த புற்றுக்களுக்குள் தற்போது நாக பாம்பு உள்ளிட்ட பாம்புகள் குடி கொண்டுள்ளன, இந்நிலையில் அவை தற்போது , ஆலயத்தை அண்மித்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள்ளும், 

விவசாய காணிகளுக்குள்ளும் படையெடுக்கின்றன. அதனால் அப்பகுதி மக்கள் பாம்புகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இது தொடர்பில் நல்லூர் பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து , 

அவர்கள் மூலம் வனவிலங்கு பாதுகாப்பு துறையின் உதவியை பெற்றுள்ளோம். அதன் மூலம் ஆலய சூழலில் நாக பாம்புகள் உள்ளிட்ட பாம்புகள் , விஷ ஜந்துக்களை கண்ணுற்றால் சமூக பொறுப்புடன் 0779507269 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு 

அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதேவேளை ஆலயத்தை அண்மித்த பகுதிகளில் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை கொண்டுவந்து உயிருடன் விடுவதனை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறேன் என தெரிவித்தார்.