நல்லாட்சி காலத்தில் பெருந்தோட்டத் காணிகளை சிங்கள அமைச்சர்கள் கைப்பற்றியபோது முற்போக்குக் கூட்டணி தூங்கிக் கொண்டிருந்தது: இ.தொ.கா உபசெயலாளர் ரூபன் பெருமாள்!

ஆசிரியர் - Admin
நல்லாட்சி காலத்தில் பெருந்தோட்டத் காணிகளை சிங்கள அமைச்சர்கள் கைப்பற்றியபோது முற்போக்குக் கூட்டணி தூங்கிக் கொண்டிருந்தது: இ.தொ.கா உபசெயலாளர் ரூபன் பெருமாள்!

கடந்த நல்லாட்சி காலத்தில் பெருந்தோட்டத் காணிகளை சிங்கள அமைச்சர்கள் கைப்பற்றியபோது  முற்போக்குக் கூட்டணி தூங்கிக் கொண்டிருந்தது அனைவரும் அறிந்த விடயமே!

-இ.தொ.கா உபசெயலாளர் ரூபன் பெருமாள்-

கொரோனா நோய்த்தொற்று காரணமாக மக்கள் மிகவும் சிரமத்தை முகம் கொடுத்து வரும் இக்காலப்பகுதியில் மக்களுக்கு சேவை செய்ய தெரியாத முற்போக்கு கூட்டணியின் பிற்போக்கு அரசியல் வாதிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசியல் செய்வதை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கடந்த நல்லாட்சி காலத்தில் கிராமங்களை அமைப்பதாகக்கூறிக்கொண்டு நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை பெரும்பான்மை மக்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்ததை மக்கள் மறக்கவில்லை என்பதனை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

கடந்த காலங்களில் புதிய சிங்கள கிராமங்களை அமைக்க மற்றும் வெள்ளப் பெருக்கு, மண்சரிவு ஏற்பட்ட போது மாற்றீடாக வழங்கப்பட்ட  காணிகளில் பெரும்பாலானவை பெருந்தோட்ட காணிகளில் பறிமுதல் செய்து பெரும்பான்மை மக்களுக்கு வழங்கப்பட்டது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் பெரும்பான்மை மக்களுக்கு தலா 20 பேர்ச்சஸ் வீதம் தோட்டக் காணிகளில் நல்லாட்சி அரசாங்கம் பெற்றுக் கொடுத்த போது எமது மக்களுக்கு 7 பேர்ச்சஸ் மாத்திரமே வழங்கப்பட்டது.

எனினும் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடனேயே பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த  7 பேர்ச்சஸ் காணி முறைமைக்கு பதிலாக 10பேர்ச்சஸ் வழங்குவதற்கு  அமைச்சரவை அங்கீகாரத்தை வழங்கியுள்ளது என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

மேலும் இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்திற்காக முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் முன்மொழிந்திருந்த காணியினை நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் முற்போக்கு கூட்டணியின் அமைச்சர்கள் இருவர் அமைச்சரவையில் இருக்கும்போதே அந்தக் காணியை பெரும்பான்மை மக்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் நல்லாட்சியில் அங்கம் வகித்த முற்போக்கு கூட்டணி அமைச்சர்கள் அமைச்சரவையில் தூங்கிக்கொண்டிருந்தார்களா? என கேட்க விரும்புகிறேன்.

இன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு சேறு பூசுவதை தொழிலாகக் கொண்டுள்ள முற்போக்கு கூட்டணி, 2015ஆம் ஆண்டுக்கு முன் ஆட்சி செய்த கௌரவ மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் எவருக்கேனும் அவ்வாறு பெருந்தோட்ட காணிகளை பெற்றுக் கொடுத்திருந்தால் அவற்றை தமது நல்லாட்சி அரசாங்க ஆட்சி காலத்தில் மீளப்பெற்று பெருந்தோட்ட மக்களுக்கு கொடுத்திருக்கலாமே? என்ற கேள்வி எழுகிறது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் கண்டி மாவட்டத்தில் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு பாராளுமன்றம் சென்ற முற்போக்கு கூட்டணி உறுப்பினரும், அந்த 'வேலுவின் வாலில்' தொங்கும் இரத்தினபுரி மாவட்ட வங்குரோத்து அரசியல்வாதியும் அரசியல் செய்ய முடியாத நிலையினை மறைப்பதற்காக அதனை வேறு விதமாக வெளிப்படுத்துகிறார்கள் என்பதே புரிகிறது. மக்களின் வாக்குகளை ஏமாற்றி பெற்று, வாக்களித்த மக்களுக்கு சேவை செய்ய தெரியாத இவ்வாறான அரசியல் வாதிகள் மக்களிடத்தில் செல்ல முடியாத காரணத்தினால் இ.தொ.காவை விமர்சித்தாவது காலத்தை கடத்தும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரொருவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸையும் எமது அங்கத்தவர்களையும் எந்தவிதமான ஆதாரமுமற்ற பொய்க்குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது தொடர்பாக, எனது கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

நல்லாட்சி காலத்தில் அமைச்சு பதவியிலிருந்த அமைச்சருடன் கைக்கோர்த்து JEDB நிறுவனத்துக்கு சொந்தமான ஹந்தானை, கெலாபொக்க மற்றும் தெல்தொட்ட ஆகிய பிரதேசங்களில் மக்களின் காணிகளை, குறிப்பிட்ட ஒரு பெரும்பான்மை பிரதிநிதி சூரையாடும்போது, நீங்கள் தரகராக செயற்பட்ட விதம் பற்றி மக்கள் நன்கு அறிவர்.

எனினும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது எப்போதும் மலையக மக்களுக்கு பொறுப்புக் கூறும் ஒரு அமைப்பு. அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் அதன்பின் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் காலம் வரை எப்போதும் பெருந்தோட்ட மக்களின் காணிகளை பாதுகாக்கும் வகையில் பொறுப்புடன் நடந்திருக்கிறோம். அதுவே வரலாறு! எதிர்காலத்திலும் அது அவ்வாரே! அது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதான கொள்கைகளிலொன்று. தற்போது கௌரவ அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்கள் மலையக மக்களுக்கு தீர்க்க தரிசனமான ஒரு தலைமைத்துவத்தை வழங்கி வரும் இச்சந்தர்ப்பத்தில் அவரை அல்லது இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பொய்யான வகையில் விமர்சிப்பவர்களை பற்றி யோசித்தால்  "சூரியனை பார்த்து நாய் குரைத்த கதை" தான் ஞாபகத்திற்கு வருகிறது.

எனவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சித்து அரசியல் செய்யும் கலாசாரத்தை மாற்றி  இந்த இக்கட்டான சூழ்நிலைகளில் மக்களுக்கு சேவை செய்து நன்மதிப்பை பெற்றுகொள்ள களத்தில் இறங்கி  சேவையாற்ற கற்றுக் கொள்ளும்படி கூறிக்கொள்ள விரும்புகிறேன் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் அவர்கள் மேலும் தெரிவித்தார்.

Radio