தமிழ் மக்களுக்காக போராடியவர்களை கூட்டமைப்பு காட்டிக் கொடுத்துவிட்டது! முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஷ் குற்றச்சாட்டு..
தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஒருமுறை ஐ.நாவில் காட்டிக் கொடுத்துவிட்டது. என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்று மாலை கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசுக்கட்சி ஐ.நாவுக்கு ஒரு வரைபு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்
குறித்த வரைவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இழைத்த போர்க் குற்றம் தொடர்பில் விசாரணையை கோருவதாக அறியக்கிடைத்தது. இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் இலங்கை அரசாங்கம் தனது படைகள் போர்க்குற்றம்
மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை என தெரிவித்து வருகிறது.இறுதி யுத்தத்தில் அதிகளவிலான தமிழ் மக்கள் கொல்லப்பட்ட நிலையில் பல மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமை தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில்
ஐ.நாவுக்கு அறிக்கைகள் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அரசைப் பாரப்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
என்பதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தொடர்ச்சியான நிலைப்பாடாகும்.இவ்வாறான ஒரு நிலையில் சர்வதேச விசாரணை வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் காத்திருக்கும் நிலையில் மக்களுக்காகப் போராடியவர்களை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என கோருகிறது.கடந்த மார்ச் மாத ஐநா அமர்விலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தை காப்பாற்றிய நிலையில் மீண்டும் ஒருமுறை அரசாங்கத்தை காப்பாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
தனது இனத்துக்காக போராடியவர்களை அதே இனத்துக்காக போராடுபவர்கள் காட்டிக் கொடுத்த வரலாறு எம் மண்ணில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான சுமந்திரன் ஒவ்வொரு ஐ.நா அமர்வுக்கு
ஒரு மாதத்துக்கு முன்னர் முஸ்லிம் இனச்சுத்திகரிப்பு எனப் பேச ஆரம்பித்துவிடுகிறார்.அவர் இவ்வாறு பேசுவது யாரோ ஒரு தரப்பை திருப்திப்படுத்துவதற்காத்தான் பேசுகிறார் என நான் நினைக்கிறேன்.ஆகவே தமிழ் மக்கள் எமது இனத்தை காட்டிக் கொடுக்கும்
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை அரசியல் பரப்பில் இருந்து அகற்றுவதே எமது இனத்துக்கு விடிவைத் தரும் என அவர் மேலும் தெரிவித்தார்.