இராணுவத்தின் ஊடாக அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி மக்களை அடக்கி ஆள அரசாங்கம் முயல்கின்றது! சுரேஸ் பிரேமச்சந்திரன்..
நாடு பஞ்சம் மற்றும் பட்டினினை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்
இலங்கையிலுள்ள பலவேறுபட்ட வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதாவது, ஐ.நா.ஆணையகம் மற்றும் ஐ.நா.பொதுச்சபை ஆகியன இலங்கை விவகாரத்தில் பிழையான செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாக
வெளிநாட்டு தூதுவர்களுடன் இடம்பெறுகின்ற சந்திப்பில் அவர் கூறி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை என்பது ஜனநாயகத்தின் உச்சத்தில் இருக்கின்றது போன்று மனித உரிமைகளை அரசு மதித்து நடக்கின்றது என்ற கோணத்தில் பேசுகின்ற ஜீ.எல்.பீரிஸ்,
இலங்கையில் இருக்கக்கூடிய பயங்கரவாத தடைச் சட்டம் இன்றும் அப்படியே இருக்கின்றது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.இதேவேளை,
தற்போது பொருளாதார அவசரகால நிலைமையென்ற பெயரில் கட்டவிழ்க்கப்பட்ட பல்வேறு பிரச்சினைகள் உருவாகி இருப்பதும் மக்கள் இவ்விடயத்தில்
எதனையும் பேசமுடியாத நிலைமையில் இருக்கின்றமையையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
ஆகவே, ஒருபக்கத்தில் தங்களை தூய்மையானவனாக காட்டிக்கொள்ள முயற்சிக்கும் இலங்கை அரசாங்கம் மறுபுறத்தில் தமிழ் மக்களுக்கு மாத்திரம்
அல்ல அனைத்து மக்களுக்கும் இன்னல்களை உருவாக்கியுள்ளது.அதாவது, பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை இலங்கை சந்தித்துள்ளது.
பஞ்சம், பட்டினி நோக்கி இலங்கை அரசு நகர்ந்து கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் இராணுவத்தின் ஊடாக அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி
மக்களை அடக்கி ஆள அரசாங்கம் முயல்கின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.