மூன்று வருட “நல்லாட்சியின்” இலட்சணம்…!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கடந்த வாரம் வெற்றிபெற்றிருக்கிறார் என்ற போதிலும் தொடர்ந்தும் நெருக்கடிகள் காத்திருக்கின்றன என்றே தோன்றுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட காலம் தொடங்கி இடையறாத அரசியல் நெருக்கடிகளை விக்கிரமசிங்க எதிர்கொண்டே வந்திருக்கிறார்.அந்த நெருக்கடிகளின் விளைவான சவால்களையெல்லாம் ஏதோவிதமாக சமாளித்து இலங்கை அரசியலில் ஒரு பிரதான பாத்திரமாக அவரால் விளங்கக்கூடியதாக இருக்கிறது.அதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது அவரை அரசியலில் ஒரு புதிர் என்றுதான் வர்ணிக்கவேண்டியிருக்கிறது.
அரசியல் தலைவர்கள் தங்களது கட்சிக்குள்ளிருந்தே தோன்றுகின்ற கிளர்ச்சிகளுக்கு அவ்வப்போது முகங்கொடுக்கவேண்டிய நிலை தோன்றுவதென்பது ஒன்றும் புதுமையனதல்ல.ஆனால், இலங்கை அரசியலைப் பொறுத்தவரை பிரதமர் விக்கிரமசிங்கவைப் போன்று அடிக்கடி உள்கட்சிக் கிளர்ச்சிக்கு முகங்கொடுத்த வேறு ஒரு தலைவரை முன்னர் ஒருபோதும் நாம் கண்டதில்லை.அதேவேளை இடையறாத சவால்களை இயன்றவரை சமாளித்து தலைமைத்துவத்தைக் காப்பாற்றுவதில் அவரைப் போன்று சாதுரியமாகச் செயற்பட்டுவந்திருக்கக்கூடிய வேறு ஒரு தலைவரையும் கூட கண்டிருக்கமுடியாது என்றும் கூறலாம்.
சுமார் கால் நூற்றாண்டு காலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்தவரும் விக்கிரமசிங்கவே இலங்கையில் மிகவும் நீண்டகாலமாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்திருக்கும் அரசியல் தலைவராவார்.அவரின் தலைமையில் பல வருடங்களாக ஆட்சியதிகாரத்துக்கு வரமுடியாமல் இருந்த காரணத்தினாலேயே ஐக்கிய தேசியக் கட்சிக்குள் அரசியல்வாதிகள் அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து தலைமைத்துவ மாற்றத்தைக் கோரினார்கள்.நான்கு தசாப்த காலமாக தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்துவரும் விக்கிரமசிங்கவிடமிருந்து நாட்டின் அதியுயர் பதவியான நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவி நழுவிக்கொண்டேயிருக்கிறது.ஏற்கெனவே இரு தடவைகள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த அவர் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கூட அந்தப் பதவியை அடைவதற்கான வாய்ப்புக் கிட்டுமென்று நம்பிக்கை வைக்கக்கூடியதாக அறிகுறிகளைக் காணமுடியவில்லை.
ஏற்கெனவே இரு ஜனாதிபதி தேர்தல்களில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர்களுக்ககு ஆதரவளிக்கவேண்டிய நலைக்குத் தள்ளப்பட்ட விக்கிரமசிங்க இனிமேலும் ஒரு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஒதுங்கி வேறு வேட்பாளருக்கு ஆதரவளிக்குமாறு தனதுகைட்சியினரைக் கேட்பது குறித்து நினைத்துப் பார்க்கவே முடியாது.
நம்பிக்கையில்லாப் பிரேரணையின் விளைவான சவால்களில் இருந்து வெளிக்கிளம்பியிருக்கும் பிரதமர் விக்கிரமசிங்க அடுத்த இரு வருட காலத்தில் வகுக்கக்கூடிய வியூகங்களைப் பொறுத்தே அவரின் அரசியல் எதிரகாலம் அமையும் என்பதில் சந்தேகமில்லை.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்து தொடர்ந்தும் தேசிய ஐக்கிய அரசாங்கம் என்ற பெயரில் ஆட்சியைத் தொடருவதென்றால் அது விக்கிரமசிங்கவுக்கோ அல்லது அவரது ஐக்கிய தேசியக் கட்சிக்கோ நன்மையாக இருக்கப்போவதில்லை என்பதை கடந்த மூன்று வருட கால ஆட்சி அனுபவம் பிரகாசமாக வெளிக்காட்டுகிறது.
நாட்டின் இரு பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் சேர்ந்து அமைத்த அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினை உட்பட நாடும் மக்களும் எதிர்நோக்குகின்ற பல நெருக்கடிகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்கான வழிவகைகளை ஆராய்வதில் கருத்தொருமிப்பு அடிப்படையிலான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதற்கு வரலாற்று முக்கயத்துவம் வாய்ந்த சந்தர்ப்பத்தைத் தந்திருப்பதாக தோன்றிய எதிர்பார்ப்புக்குளும் நம்பிக்கைகளும் சிதறடிக்கப்பட்டுவிட்டன.இரு பிரதான கட்சிகளையும் பங்காளிகளாகக் கொண்ட அரசாங்கம் தொடருவதில் நாட்டு மக்களில் எந்தவொரு பிரிவினருக்கும் பயன் கிடைக்கப்போவதில்லை.மாறாக மக்களின் எந்தவொரு பிரச்சினையும் தீர்க்கப்படாமல் மேலும் அவர்களுக்குப் பிரச்சினைகளே அதிகரிக்கும் .
படுமோசமான ஊழல் மோசடிகளும் அதிகார துஷ்பிரயோகங்களும் சட்டத்தின் ஆட்சியின் சீர்குலைவும் தலைவிரித்தாடிய ஆட்சியைப் பத்து வருடங்களாக நடத்திய ராஜபக்சாக்களே தங்களது மீட்பர்களாக மீண்டும் பதவிக்கு வரவேண்டுமென்ற எண்ணம் தென்னிலங்கையில் பெரும்பான்மையான மக்கள் மத்தியில் வளருவதற்கு வழிவகுத்ததே ஜனாதிபதி சிறிசேனவினதும் பிரதமர் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான அரசாங்கத்தின் நல்லாட்சியின் இலட்சணமாக மிஞ்சி நிற்கிறது.
NEWS: Tamilenews.com